August 25, 2009

புதிய தலைமுறை - ஒரு பார்வை

புதிய தலைமுறை” இதழின் மாதிரி இதழ் கிடைத்தது.அட்டையே அட்டகாசமாய் இருந்தது. இந்தியா டுடேயின் சாயல். இதழின் உள்ளடக்கம் பற்றித் தனிப் பக்கம் போடாமல் அட்டையிலேயே 4 பகுதிகளை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.அதிலும் பக்கம் எண் இல்லை. உள்ளடக்கத்திற்கு தனிப் பக்கம் இருப்பது நல்லது. முதல் கட்டுரையே இளம் பெண் சாதனையாளர்கள் பற்றி. தலைப்பு “ வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்”. திரப்படங்களில் வரும் முதல் வசனம் போல மங்களகரமாக வைத்திருப்பார்கள் போலும்.அதே பக்கத்தின் இறுதியில் பெரிய எழுத்துகளில் “அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் பெண்களைச் சேரும்”. சரி சரி.. புரியுது.. :)

”உதவி காத்திருக்கு” என்ற அருமையான பகுதியை ஆரம்பித்திருக்கிறார்கள். தடை இன்றி தொடரவேண்டும்.ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கான , அரசு/அரசு சாரா அமைப்புகளின் உதவிகள் பற்றி எழுதி இருக்கிறார்கள். இந்த ஆண்டிற்கான விண்ணப்ப கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலும் விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்வை இடவும். ப்ரேர்ணா என்ற அமைப்பு பற்றியும் விவரம் வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் தொலைபேசி எண் : 9900906338.( நன்றி : புதியதலைமுறை)

பொறியியல் கவுன்சிலிங் பற்றி நம் வலையுலக இரட்டையர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். கட்டுரை ஒரு மொக்கை பதிவுக்கு சற்றும் சளைக்காமல் இருந்தாலும் பெட்டிச் செய்திகளாகக் கொடுத்திருக்கும் தகவல்கள் அருமை. “ரொம்பவும், நெருக்கி அடித்து, கடையைக் கட்டுவதற்குள்” போன்ற குமுதம் , குங்குமம், வலைப்பதிவு வகையறாக்களின் மொழியில் தான் எழுத வேண்டுமா?. சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக வார்த்தைகள் பயன்படுத்துவது சரி அல்ல. வலிமையான ஊடகத்தில் வாய்ப்புப் பெற்றும் வழக்கமாகவே எழுதுவது நல்லதல்ல. வாய்ப்பைக் கொண்டு மொழிக்கும் நல்லது செய்யுங்கள். அதைக் கெடுக்கும் வேலைகளை எல்லாம் வலையுலகில் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.ஒரு ஜனரஞ்சகக் கட்டுரை எழுதுவதற்கும் தகவல் சார்ந்த கட்டுரை எழுதுவதற்கும் வேறுபாடுகள் இல்லையா என்ன?.இனி கூடுதல் கவனத்துடன் எழுத உரிமையுடன் வேண்டுகோளும் வாழ்த்துகளும்.

தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் புதுப் பாய்ச்சல் என ஒரு நல்ல கட்டுரை கவர்கிறது. முண்டியடித்து முட்டி மோதி வென்ற இளம் இயக்குனர்களைப் பற்றி அழகாய் எழுதி இருக்கிறார்கள். ஒரு தன்னம்பிக்கைக் கட்டுரைக்கு உரிய நடை. இதே போல் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றியும் கவனமாக ஆராய்ந்து தவறான தகவல்கள் இன்றி தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். சினிமா விமர்சனம் என்று வழக்கமாக எழுதிவிட்டு இறுதியில் நம் சக வலைபபதிவர்கள் அதே படத்திற்கு எழுதி இருக்கும் விமர்சனங்களின் சில வரிகளை பிரசுரித்திருப்பது புதுமை.

சந்திப்பு, மின்னஞ்சல் சிந்தனை, மருத்துவம்/ஆரோக்கியம் என்ற பகுதிக்காக சர்க்கரை நோய்ப் பற்றிய( இன்னும் எத்தனை லட்சம் கட்டுரைகள் தான் இது பற்றி எழுதுவார்களோ. எல்லாம் ஒரே மாதிரி பயமுறுத்தல் மற்றும் தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை.. ஸ்ஸ்ஸபாஆஆஆ..முடியல..) கட்டுரை, பயணக் கட்டுரை ( பார்க்கும் இடமாவது இதுவரை யாரும் சொல்லாத/செல்லாத இடமாக இருந்தால் நல்லது சாமிகளா) என ஒரு ஜனரஞ்சக வார/மாத இதழுக்கே உரிய பகுதிகள் தவறாமல் இடம் பிடித்திருக்கின்றன. இதில் உமாசக்தியின் ’புத்தரும் நானும்’ கவிதை அபாரம்.முதல் இதழிலேயே எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டார்கள். நட்புக்காக மொக்கை கவிதைகளை பிரசுரித்து கடுப்பேற்றாமல் இதே ரீதியில் தரமான கவிதைகளுடன் தொடர்ந்தால் நலம். இலங்கையிலிருந்து திரும்பிய(கவனமான வார்த்தை , சொந்த ஊருக்கும் மீண்டு(ம்) வந்தால் அது திரும்புதல் தானே. சபாஷ் ஷக்தி) புத்தர் இங்கே நடக்கும் அழிச்சாட்டியங்களைக் கண்டு தப்பிக்க நினைக்கும் வேளையில் எதிரே வந்து விழும் துப்பாக்கியையும் கத்தியையும் நடுங்கிய கைகளால் எடுத்துப் பார்ப்பதாக முடித்திருக்கிறார். இந்த இதழ் விற்பனைக்கு அல்ல என்பதால் உமா ஷக்தியே அவர் வலைப்பூவில் வெளியிடுவார் என நினைக்கிறேன்.

அச்சத்தை வென்றது எப்படி? என்று 25 வரிகளில் ஒரே பக்கத்தில் கவிதையாய் சொல்லி இருக்க வேண்டியதை வலுக்கட்டாயமாக வார்த்தைகளைப் பிரித்துப் போட்டு கவிதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் புரியாமல் வைரமுத்துவை வைத்து இரண்டு பக்கங்களை நிரப்பி இருக்கிறார்கள். சோதனை இதழுக்கே மேட்டர் பஞ்சமா?.

கடவுள் எங்கே இருக்கிறார் என்ற மின்னஞ்சல் சிந்தனைப் பகுதிக்கு வெளியிட்டிருக்கும் வாசுதேவனின் ஓவியல் ஆயிரம் மொழிகள் பேசுகிறது. நிஜமாவே அது ஓவியமா, இல்லை புகைப் படத்தில் சித்து வேலைகள் செய்திருக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. உண்மையிலேயே ஓவியமாக இருக்கும் பட்சத்தில் வாசுதேவனுக்கு பலமான கைக்குலுக்கல். அதில் ’ஓவியம்:வாசுதேவன்’ என்று தான் இருக்கிறது.

சிறுகதை, கார்ட்டூன், படங்களில் எதையாச்சும் கண்டுபிடிக்கிறது, செய்தி( வடிவமைப்பு நக்கீரன் நெடி.. நல்லா இல்ல.. ), தகவல் தொழில்நுட்பம், புத்தக அறிமுகம் என சேம் சேம்..( ஷேம் ஷேம் இல்ல).

அரசியல் செய்திகள் இல்லை என்று யாரும் பல்லு மேல நாக்கு போட்டு சொல்லிடக் கூடாது என்று அரசியலில் வாரிசுகளின் வரைபடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் செய்தி எதுவும் இல்லை. சும்மா படம் மட்டும் தான். அரசியல் செய்திகள் இல்லாமல் வெளிவரும் ஒரே இதழ் இதுவாகத் தான் இருக்கும் போல.இளம்பெண் சாதனையாளர்கள் பற்றியக் கட்டுரைத் தவிர வேறு எங்கும் தேசிய அல்லது சர்வதேச செய்திகள் மருந்துக்குக் கூட இல்லை. கவனிக்கவும்.

இந்த இதழின் 90 சதவீத உள்ளடக்கம் உட்கார்ந்த இடத்திலிருந்தே கொஞ்சமும் மெனக் கெடமால் தொகுத்தவைகளாகத் தான் இருக்கிறது. பயணக் கட்டுரையும் நம்ம இரட்டையர்கள் அண்ணா பல்கலைக் கழகம் வரை சென்றதும் சீமானின் உப்புச்சப்பில்லாத சந்திப்புக்கும் மட்டுமே வெளியே சென்றிருக்கிறார்கள் போல. இதெல்லாம் ஆவறதுக்கில்லை. பேர் மட்டும் புதிய தலைமுறை என்று இருந்தால் போதுமா?. செயலில் இருக்க வேண்டாமா?

இப்போதைக்கு தமிழில் சிறந்த இதழ்களென்றால் அவ்வப்போது இந்தியா டுடேயும் , தி சண்டே இந்தியனின் அனைத்து இதழ்களும் தான். இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு சிற்றிதழ்கள் தாண்டி ஆனந்த விகடன் பிடித்திருக்கிறது( அதுவும் சிறுகதைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும் வேறு மாற்று இல்லாததால் மட்டுமே அல்லது தொட்டில் பழக்கம்..... )

மெனக் கெடாமல் தயாராகி இருக்கும் 48 பக்கங்கள் கொண்ட( அட்டைகள் நீங்கலாக) புதிய தலைமுறை இதழின் தற்போதைய வடிவத்திற்கு 5 ரூபாய் விலை என்பதே அதிகமாகத் தான் இருக்கும். எவ்வளவு விலை வைக்கிறார்கள் எனப் பார்ப்போம். உள்ளடக்கத்தில் புதுமையும் கவனுமும் தேவை. சர்வே எல்லாம் எடுத்தாங்களே. அதெல்லாம் சும்மா லுலுல்லாய்க்கா... புதிய தலைமுறை - சிறந்த இதழாக வருவதற்கு வாழ்த்துவோம்.

14 comments:

சின்ன அம்மிணி said...

//இதழின் தற்போதைய வடிவத்திற்கு 5 ரூபாய் விலை//
ஐந்து ரூபாய் பரவாயில்லை என்று நினைக்கிறேன். புத்தகத்தில் வரப்போகும் சரக்கைப்பொறுத்து விலை மாறலாம்.

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

சஞ்சய்,
இதழ் பற்றிய அருமையான, ஆழ்ந்த அலசல்.
பகிர்தலுக்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

அன்புடன் அருணா said...

எப்ப்டிப்பா...இப்படிப் பொறுப்புள்ள பையனா...எப்போதிருந்து மாறினே??நல்ல அலசல்...

நாடோடி இலக்கியன் said...

//இப்படிப் பொறுப்புள்ள பையனா//

அதானே...

//நட்புக்காக மொக்கை கவிதைகளை பிரசுரித்து கடுப்பேற்றாமல் //

:)

நல்ல அலசல் சஞ்சய்.நிறை குறை தெளிவா அலசியிருக்கீங்க.

மங்களூர் சிவா said...

சர்வேல கலந்துகிட்டதால அட்ரஸ் அனுப்புங்க புத்தகம் அனுப்பறோம்னு மெயிலினாங்க வரட்டும் பாப்போம்
:)))

தண்டோரா ...... said...

சஞ்சய்..நானும் பார்த்தேன்.நம்மாளுக தூள் பண்ணிடுவாங்க(அவிங்க முதலாளி அரசியல் அரிதாரம் பூசப்போகிறார்..அதான் கவலையா இருக்கு..பின்ன கட்சி பத்திரிக்கையா மாறிடுமே)

கலகலப்ரியா said...

good 1! "scrumptious blog award" namma site la oc la kodukkarom.. :p eduthundu poi yarukkavathu kodukka mudiyumnaa paarunga saare.. ! (intha award kandu pudikkaravangalukku oru award kodukkanum.. best award creators award nu..)

Mitr - Friend said...

Good to know about this book. All the best to its makers...
My Travelogue, Thozhi-Mitr-Friend, Savoir-Faire

நிஜமா நல்லவன் said...

/புதிய தலைமுறை - சிறந்த இதழாக வருவதற்கு வாழ்த்துவோம்./

வாழ்த்துக்கள்!

SanjaiGandhi said...

சின்ன அம்மிணி அக்கா,
5 ரூபாயே அதிகம்னு சொன்னேன்க்கா.. அவஙக் இன்னும் விலை வைக்கலை.. சோதனை இதழை விட மிக சிறப்பாய் வரும் என சொல்லி இருக்கிறார் அதன் ஆசிரியர்.. பார்ப்போம்.

வாசு சார்,
நன்றி. உங்களுக்கும் கிடைத்திருக்குமே.

அருணாக்கா,
என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :))

நாடோடி
ரொம்ப நன்றிங்க.

மங்களூர் மாம்ஸ்
வரும். பாருங்க. :)

தண்டோரா ,
தூள் பண்ணட்டும். அரசியல் இருக்காதுன்னு சொல்றாங்க. பார்ப்போம்.

லகலகப்ரியா,
இதெல்லாம் அழுகுணி ஆட்டம். சைட்ல படம் போட்டுகிட்டு விருது குடுத்திருக்கேன்னு சொல்றது கொஞ்சம் கூட நியாயமில்லை.. :)

mitr
நன்றி..

நன்றி மெய்யாலுமே நல்லவரே.. ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கும் அது ஓவியமாட்டமே தெரியல.. அத்தனை அச்சு அசலா??

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

துளசி கோபால் said...

அட! துவைச்சுக் காயப்போட்டுட்டீங்க!!!

அருமையான அலசல் சஞ்சய்.
நல்லா இருக்கு.


சின்ன அம்மிணி சொல்லித்தான் நீங்க இது பற்றிப்போட்டது தெரிஞ்சது. அதுக்கு சி.அ.வுக்கு ஒரு தாங்க்ஸ்.

கொஞ்சநாளா மேய்ச்சலுக்குச் சரியாப்போக முடியலை. அதுக்குள்ளே என்னென்னவோ நடந்துருக்கேப்பா:-)

SanjaiGandhi said...

முத்தக்கா,
எனக்கும் டவுட்டு தான். ஆனா ரொம்ப நல்லா இருக்கு..

நன்றி துளசி டீச்சர்..
சின்ன அம்மிணி அக்காவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள். :)

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget