உயிரைக் குடித்த முத்தம்

வருங்காலத் தூண்கள்
சரிகிறது
முதுகில் புத்தகப் பொதி..

***

அம்மாவுக்கு மூக்குக் கண்ணாடி
அப்பாவுக்கு மூட்டு ஆப்பரேஷன்
மகனுக்கு பள்ளிக்கட்டணம்
மனைவிக்கு சொந்த வீடு
எனக்கு
இழந்த என் வேலை..

***

(நீண்ட நாட்களுக்கு முன் எழுதி வேலன் அண்ணாச்சி வலைப்பூவில் வந்த கவிதை )

எப்போதும் சுவாரஸ்யம் தான்
எதிர் திசை ஓடும் ஜல்லிக்கற்கள்
கூடவே பயணிக்கும்
பக்கத்துத் தண்டவாளம்
பச்சைக்கே தானம் தர தயாராய்
தென்னந்தோப்புகள்
கவனம் சிதறாத
சோளக்காட்டு பொம்மை
கோடையிலும்
தண்ணீர் சுமக்கும் குட்டைகள்
வானம் பார்த்த பூமிகளில்
வரிசையாய்க் கோரைப்புற்கள்
ஆங்கிலேயரை மறக்கவிடாத
கிராமத்து ரயில் நிலையங்கள்
சுவாரஸ்யமாய்
புது உலகத்தில் நான்..
“அண்ணா..”
கவனம் கலைக்கிறான்
கையேந்தி நிற்கும் சிறுவன்..

டிஸ்கி : பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு இல்லை.. :-)

Read more...

மாணவி தற்கொலை - யார் குற்றம்?

வடகரைவேலன் அண்ணாச்சி, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட கோவை மாணவி பற்றிய செய்தியை கதம்பத்தில் எழுதி இருக்கிறார். அது ஆழமான விவாதத்திற்கு உரிய செய்தி. அந்த மாணவியின் மரணத்திற்கு பெற்றோரும் காரணம் என்பது போல் சிலர் சொல்லி இருந்தார்கள். என் பார்வையில் ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே குற்றவாளிகள். பள்ளியில் பாடத்துடன் சேர்த்து ஒழுக்கமும் கற்றுக் கொடுப்பது ஆசியர்களின் கடமை தான். ஆனால் ஒழுக்கத்தை மிரட்டலின் மூலம் கற்றுக் கொடுக்கக் கூடாது. இப்போது இருக்கும் மட்டமான கல்வி முறையை பின்பற்றிக் கொண்டு விட்டு, அந்த மாணவி காப்பி அடித்ததை எந்த வித்தத்திலும் நியாயப் படுத்தவில்லை.

ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் சிலவற்றை யோசித்திருக்க வேண்டும். முதலில் அந்த மாணவியின் மனநிலை அறிந்திருக்க வேண்டும். எது போன்ற தண்டனைகளை அவளால் தாங்கிக் கொள்ள முடியும் அல்லது எந்த முறையில் அவளைத் திருந்த வேண்டும் என்பதை யோசித்திருக்க வேண்டும். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் “ ஒருத்தனைப் பார்த்ததும் அவன் கிரிமினலா இல்லையான்னு கண்டு பிடிக்க முடியாதவன் என்னைய்யா போலிஸ்காரன்?” என்பார். அதே போல், மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியும் ஒரு மாணவியின் மனநிலைப் புரியாதவர் என்ன ஆசிரியர்?.

அந்த மாணவி ரொம்ப சென்சிடிவாக இருக்கும் பட்சத்தில், அப்போதைக்கு சாதாரனமாக அவரை கண்டித்து விட்டு , தொலைபேசி வாயிலாகவோ கடிதம் மூலமோ அந்த மாணவியின் தவறை அவள் பெற்றோருக்குத் தெரிய படுத்தி , மிகக் கடுமையாக நடந்துக் கொண்டால் ஏற்பட சாத்தியமாகும் விளைவுகளைப் புரியவைத்து , மென்மையாக அவளுக்குப் புரியவைக்க சொல்லி திருத்தி இருக்க வேண்டும். அதை விட்டு, எடுத்த எடுப்பிலேயே உன் பெற்றோரை அழைத்து வா என்பது மிருகத் தனம். அந்த மாணவி , தான் செய்த தவறை தன் பெற்றோரிடமே சொல்லி அதற்காக பள்ளிக்கு அழைக்கிறார்கள் என்பதை எப்படி தைரியமாக சொல்வாள்?. பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தன் பிள்ளைகளின் சிறு பிழைகளைக் கூட பொறுமையாக யோசித்து அறிவுரை சொல்லும் மனப் பக்குவம் கிடையாது. உடனே அடிப்பார்கள். அல்லது வேறு யாருடனாவது ஒப்பிட்டு மனதில் நீங்காத காயத்தை எற்படுத்துவார்கள். இது போன்ற சூழலில் அந்த மாணவியிடம் அவர் பெற்றோரை அழைத்து வர சொன்னது பெரும் குற்றம்.

பொறுப்பாக இருக்க வேண்டிய ஆசிரியையே யோசிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் போது, அந்த சிறுமியின் அவசர புத்தியை எப்படி குறை சொல்வது?. போதிக்கும் நிலையிலிருபப்வர்களே யோசிக்காமல் கடுமையாக நடந்துக் கொண்டு தண்டனைக் கொடுக்கும் போது, அவ்வளவாக படிப்பறிவில்லாதவர்கள் அல்லது தங்களால் முடியாததை தங்கள் பிள்ளைகள் மூலம் அடையத் துடிக்கும் பெற்றோர்கள் பொறுமையாக நடந்துக் கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?. எப்படிப் பார்த்தாலும் ஆசிரியை செய்ததே பெரிய தவறாக தெரிகிறது.

மேலும் பாடப் புத்தகங்களை மனப்பாடம் செய்ய வைப்பதில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட மாணவர்களுக்கு மனவலிமை கிடைக்க செய்யும் எந்த பயிற்சியையும்பெரும்பாலான பள்ளிகள் அளிப்பதில்லை. முதலில் இந்த பாழாய்ப் போன தேர்வு முறைகளையும் மதிப்பெண் முறைகளையும் ஒழிக்க வேண்டும்.

அந்த மாணவி தன் உள்ளங்கையில் எழுதி வைத்திருந்த வாசகம் :

“sorry, everybody... give everyone a chance 2 change”

இனியும் இது போன்ற மரணங்கள் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.

Read more...

நூல(வாச)கம்







”செல்போன் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்”
நிச்சயம் தவிர்ப்பேன்
அவள் அழைக்கும் வரை..











”வண்ண ப்ளோ அப் கேட்டு வாங்குங்கள்”
அட்டையில் மிளிர்ந்தது
நானும் கேட்டேன்
முறைத்தார் நூலகர்..










நான் எடுக்கும்
மூன்றுப் புத்தகங்கள் தவிர
எல்லாம் மோசமாக தெரிந்தது
ஒவ்வொரு முறையும்...









எதையோ தேடினேன்
பளபளவென்று ஒரு புத்தகம்
அட்டையில் “குறுந்தொகை”
என் நினைவில்,
நேற்று வாங்கிய
என் பளபள பர்ஸ்..
அதன் குறுந்தொகையுடன்....

Read more...

தத்துபித்துவம் - 3

கடந்த வியாழன் அன்று விஜ்ய டிவி சார்பில் கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் “கமலும் காதலும்” என்ற தலைப்பில் SPB தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கமல் நடித்த படங்களில் இருந்து காதல் ரசம்( இதை கலந்து சோறு சாப்ட முடியுமா?) சொட்டும் 30 பாடல்களைப் பாடினார்கள். ஆரம்பத்தில் சுமாராகத்தான் இருந்தது. SPB , சித்ரா, சைந்தவி தவிர மற்றவர்கள் லேசாக அல்லது நல்லாவே சொதப்பினார்கள். அதுவும் ஸ்ரீதர் பார்த்தசாரதி வந்து பாடும் போதெல்லாம் மகாஜனங்கள் கொத்துக் கொத்தாக தடைகளைத் தாண்டி குதித்தோடினார்கள். முக்கால்வாசிக் கூட்டம் காலியான பின் எங்களையும் சேர்த்து சில நூறு பேர் மட்டுமே இருந்தோம். அதன் பிறகு தான் கச்சேரியே கலை கட்டியது. முதலில் மெலடி பாடல்களில் தட்டுத் தடுமாறின இளம் பாடகர்கள் பின் ஹைபிட்ச் குத்துப் பாடல்களில் பின்னிப் பெடலெடுத்தார்கள். கடைசியாக அனைவரும் சேர்ந்து சில பாடல்களின் சில வரிகளைப் பாடினார்கள். அட அட.. சூப்பரப்பு.. அதிலும் முதல் பாடலாக ”அம்மாவும் நீயே” பாடலைப் பாடின சைந்தவி அந்தப் பாடலைப் பாடுவதற்காகவே பிறவி எடுத்திருப்பார் போல. சபாஷ் சைந்தவி. சைந்தவிக்கும் இசை அமைப்பாளார் ஒருவருக்கும் காதல் இழையோடுவதாக சொல்லப் படும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டுக் கொள்கிறேன். சைந்தவி பாடல்களை ரசிக்க இங்கே

எப்போவுமே துக்கத்துல இருக்கிறவங்களை வச்சி காமெடி பண்ணா கடுப்பாய்டும். ஆனா சிலர் அதையும் மீறி ரசிக்க வச்சிடுவாங்க. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜஷேகர ரெட்டி விபத்தில் இறக்கவில்லையாம். விஜய் காங்கிரசில் சேர்வதாக வந்த செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டாராம். விஜய் நடித்த படங்களை மட்டும் வச்சிக் காமெடி பண்ணவங்களுக்கு இப்போ புதுசா அரசியலும் கிடைச்சாச்சி. விஜய் வச்சி காமெடி பண்ணி தினமும் லட்சக் கணக்கான ( ச்ச.. இதுக்கு தான் சாரு ப்ளாக் படிக்கக் கூடாதுன்னு சொல்றது.. அதுல சொல்லி இருக்கார் “காலையில் 10 முட்டை, ஒரு கிலோ மாமிசம், இரண்டு லிட்டர் பால்; மதியம் பத்து கோழி, 20 முட்டை, 2 கிலோ காய்கற்கள் என்று இப்படியாகப் போகும் அவர்களுடைய உணவுப் பட்டியல்.") SMS வரும்.

இளைஞர் காங்கிரஸ்ல சேர்வதற்கு 35 வயதை கடந்திருக்கக் கூடாதுன்னு சொன்னதும் நிறைய பேருக்கு குழப்பம். ராகுல்காந்திக்கு 39 வயது ஆய்டிச்சே. அவருக்கு இந்த விதி பொருந்தாதா என்று கேட்கிறார்கள். ராகுல்காந்தி , இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் கூட இல்லை. அவர் கட்சியின் பொதுச் செயலாளர். மற்றப் பொதுச் செயலாளர்கள் எல்லாம் எதாவது மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருப்பார்கள். ராகுல்காந்தி , மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரசிற்கு பொறுப்பாளராக இருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெயர் அசோக் தன்வர். மாணவர் காங்கிரஸ் தலைவர் பெயர் ஹிபி எடன்.

சில சமயங்களில் அரசியல் செய்திகள் படிக்கும் போது மிக அரியத் தகவல்கள் எல்லாம் எல்லாம் தெரியவரும். சமீபத்தில் ஜீவியில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம் பற்றிய செய்தி படித்தேன். அவருக்கு(ம்) மனைவி துணைவி இருக்கிறார்களாம். மனைவி சேலம் பூலாவாரியிலும் துணைவி சென்னையிலும் இருக்கிறார்கள். துணைவிக்கு பிரபு என்கிற மகன் இருக்கிறாராம். தற்போது சேலத்தில் துவங்கி இருக்கும் VSA பொறியியல் கல்லூரியின் தலைவராக மனைவி மகன் ராஜா MLAவும்( கருணாநிதி குடும்பம் போல் தந்தையும் மகனும் MLAவாக இருப்பது வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தில் தான்) தாளாளராக துணைவி மகன் பிரபுவையும் நியமித்திருக்கிறார். மேட்டர் இது இல்ல. வீரபாண்டியாரின் துணைவி , நடிகை மீனாவின் சொந்த சித்தியாம். வரலாறு முக்கியம் அமைச்சரே.

20- 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த போது கிரிக்கெட்டின் பாரம்பரியம் அழியும் என பலரும் சொன்னதை மேலும் பலரும் மறுத்தார்கள். இப்போது சச்சின் டெண்டுல்கர் புது ஃபார்முலா வெளியிட்டிருக்கிறாராம். ஒரு நாள் போட்டியை 25 , 25 ஓவராக தவணை முறையில் ஆடினால் விறுவிறுப்பாக இருக்குமாம். நல்லா சொல்றாங்கய்யா ஓசனை. 20-20 போட்டிகள் அதிக அளவில் நடைபெற்ற கடந்த 12 மாதங்களில் தோனி தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராம். 50 கோடியுடன் தோனி முதல் இடத்திலும் 40 கோடியுடன் சச்சின் 2வது இடத்திலும் இருக்கிறாராம். ஸ்டேடியத்துக்கு வெளியே விளம்பரங்கள்ல நல்ல தான் ஆடறாங்க. இது கூட இல்லைனா எப்புடீ?. இதே ரீதியில் பின்னூட்டத்தில் ஐடியா தருபவர்களுக்கு அடுத்த 1-1 பால் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு வழங்கப் படும்.

TheRisingSun என்ற புதிய ஆங்கில வார இதழ் தமிழகத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. நிறுவனர் : முத்தமிழறிஞர் மு. கருணாநிதி. திமுக, தேசியக் கட்சியாக வளர்ந்துவிட்டதாக சொல்லப் படும் நிலையில் விரைவில் இந்தியில் வார இதழோ நாளிதழோ எதிர் பார்க்கலாம்.

உன்னைப் போல் ஒருவன் ட்ரைலர் பட்டையைக் கிளப்புது. இதன் இந்தி வெர்ஷனான Wednesday மிக அற்புதமாக இருந்தது. உ.போ.ஒருவன் இசை ஸ்ருதி கமல். ட்ரெய்லரில் அசத்தலாக இருக்கிறது. படம் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.


அம்புட்டு தான்..

Read more...

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்


காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திராவில் மிகத்திறமையாகவும் மக்களின் நன் மதிப்புடனும் ஆட்சி செய்து பலத்தப் போட்டிகளுக்கிடையே ஆந்திர மக்களால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்தவருமான முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கும் அவருடன் பயணித்து மரணம் அடைந்த விமான ஓட்டிகள், அரசு அலுவலர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

  • பிறந்தது : ஜூலை 8, 1949
  • மருத்துவர்
  • நான்கு முறை ஆந்திர சட்ட மன்றத்திற்கும் நான்கு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
  • போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வென்றவர்.
  • இரண்டு முறை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்.
  • ஒரு முறை ஆந்திர சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்.(1999-2004)
  • 2004 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதி வெற்றிகளுடன் முதல்வராக இருந்தார்.
  • 2009 தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
  • 2009 பாராளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்.
  • செப்டம்பர் 2, 2009ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவிலும் மிகப் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

Read more...

பரளிக்காடு சுற்றுலா - பதிவர்களுடன்

ரளிக்காடு : கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.

இரண்டு கட்டமாக பரிசல் பயன்படுத்தும் அளவு ஆட்கள் இருந்தால், ஒரு பிரிவை படகு சவாரிக்கும் மற்றொரு பிரிவை மலையேற்றத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். பின் மதிய உணவு முடித்து இடம் மாறிக்கொள்ள வேண்டியது தான்.

அங்கு 10 மணிக்கே வர வேண்டும் என சொல்லி இருந்ததால் காலை 7 மணிக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தாலும் மயில் விஜி வீட்டில் காலை உணவு முடித்து கிளம்ப 8.45 மணி ஆகிவிட்டது. வழியில் இரண்டு சோதனை சாவடிகளிலும் தெளிவாக வழி சொன்னார்கள். பரளிக்காடு செல்ல 10.30 மணிக்கு மேல் ஆனது. வன அலுவலர் திரு. சீனிவாசன் அவர்கள் இன்முகத்துடன் எங்களை வரவேற்றார். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டதும் தேநீர் குடிக்க தந்தார்கள்.ஆரம்பமே அழகாய் இருந்தது. எங்களுக்கு முன்பே ஒரு மருத்துவத் தம்பதிகள் காந்திருந்தார்கள். நாங்கள் தான் தாமதம் என்று நினைத்தால் எங்களுக்கு பின்னும் சிலர் வந்தார்கள். அனைவரும் வரும் வரை ஓய்வெடுக்க பெரிய ஆலமரங்களுக்குக் கீழே நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட ஆலமரத்தில் சில ஊஞ்சல்கள் அமைத்திருக்கிறார்கள். 10 பரிசலுக்குமான ஆட்கள் சேர்ந்ததும் பயணம் செல்ல தயாரானோம். 50 அடி ஆழ நீர்த்தேக்கம் என்பதால் லைஃப் ஜாக்கெட் அணிவித்து பாதுகாப்பாக அனுப்பினார்கள்

வெயிலும் நிழலும் மாறி மாறி அழகான க்ளைமேட். பரிசலையும் வெயிலிலும் கரையோர மரங்களின் ஊடாக நிழலிலுமாக செலுத்தி மேலும் இனிமையான பயணமாக்கினார்கள்.மிக நல்ல பரிசல் ஓட்டிகள். இனிமையாக பழகினார்கள். எனக்கும் கொஞ்ச நேரம் பரிசல் ஓட்டக் குடுத்தார்கள். என்னுடன் பயணித்தவர்கள் தான் திகில் தோய்ந்த முகத்துடன் இருந்தார்கள். என்னால் வேகமாக ஓட்ட முடியவில்லை. அவர்கள் ஒரு கட்டையின் மேல் அமர்ந்து சவுகரியமாக துடுப்புப் போடுகிறார்கள். நான் கேட்டபோது நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே செலுத்த சொல்லிவிட்டார். அவ்வளாவு சவுகர்யமாக இல்லை. ( இல்லைனா மட்டும் 100 கிமீ வேகத்துல ஓட்டிடற மாதிரி ).

சிறுது தூரம் சென்றதும் அனைத்துப் பரிசல்களையும் கரையோரம் நிறுத்திவிட்டு, காட்டில் சென்று பார்க்க சொன்னார்கள். இறங்கிய இடத்தில் காட்டெறுமையின் கொம்பு மற்றும் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கு ஒரு புகைபடப்பிடிப்பு முடித்து கண்ணுக்கு தெரிந்த வழியில் காட்டிற்குள் சென்றோம். சிறிது தொலைவு சென்று பின் அதே வழியில் திரும்பி வருவதாக நினைத்து வழி தவறினோம். வழி கண்டுபிடிப்பதற்காக ஆளுக்கொரு திசையில் கொஞ்ச நேரம் தொலைந்து திரிந்தது ஆங்கிலப் படக் காட்சிகள் போல் இருந்தது. சினிமாவில் வருவது போல் பேர் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தோம். அழகான அனுபவம். பின் கரையை அடைந்து பயணத்தைத் தொடர்ந்தோம். பின் எதிர் கரை பக்கம் பயணம் செய்து திரும்பினோம். சுமார் இரண்டு மணி நேரம். மிக அற்புதமான பரிசல் பயணம். பரிசல்களை அருகில் செலுத்தி திண்பண்டங்கள் மாற்றிக் கொண்டதும் அறிமுகமே இல்லாத சக சுற்றுலாப் பயணிகளுடன் சந்தோஷமாய் பேசிகொண்டு வந்ததும் மறக்க இயலாத தருணங்கள்.
பரிசல் பயணம் முடிந்ததும் மதிய உணவு தயாராய் இருந்தது. அந்த பகுதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப் பட்டு மரிமாறப்பட்டது. உணவு வகைகள் ;

  • சர்க்கரைப் பொங்கல்
  • சப்பாத்தி
  • வெஜ் பிரியாணி
  • தயிர் பச்சிடியும் குருமாவும்
  • ராகி களி
  • கீரைக் குழம்பு மற்றும் கருவாட்டுக் குழம்பு.
  • தயிர்சாதம்
  • வாழைப் பழம்
மிக மிக சுவையாக சமைத்திருந்தார்கள். தேவையான அளவு சாப்பிடலாம். நானும் அண்ணாச்சி வடகரைவேலனும் போட்டிப் போட்டுக் கொண்டு களி சாப்பிட்டோம். என்ன இருந்தாலும் ஊரில் வீட்டில் கீரைக்குழம்புடன் ராகிக் களி சாப்பிடும் சுவை இல்லை. அதுவும் பழைய களியுடன் கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். அதை ஒப்பிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டால் சுவையே. ஆனாலும் மூன்று உருண்டைகள் உள்ளே தள்ளினேன். மற்றவை எல்லாம் மிக நன்று. நாற்காலிகள் தவிர வேறு ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதில்லை. யாரோ நீரில் போட்டுவிட்ட ப்ளாஸ்டிக் பை ஒன்றை பரிசலில் சென்று எடுத்துவந்தார்கள். அவ்வளவு சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
மதிய உணவு முடிந்ததும் திரு. சீனிவாசன் அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம். அத்திக்கடவு செல்லும் வழியைத் தொலைத்து 15 கிமீ தூரம் சென்று திடீர் சந்தேகத்தில் திரும்பிவந்து சரியான பாதையை அடைத்து அத்திக்கடவு சோதனை சாவடி வந்தோம். அங்கே ஒரு வன அலுவலர் மலையேற்றத்திற்கான வழியை சொன்னார். வழிகாட்டவே அவரை நியமித்திருக்கிறார்கள் போல.
ஆற்றங்கரை அருகே ஏற்கனவே இருந்த ( எங்களுடன் பரிசல் பயணம் வந்தவர்கள்) வாகனங்களைக் கடந்து ஆற்றை அடைந்து ஆனந்தக் குளியல் போட்டோம். ஆற்றில் குளித்து( ஆற்றில் மட்டுமா? ) எத்தனை ஆண்டுகள் ஆகிறது. நீரின் வேகம் சற்று அதிகமாகவே இருந்ததாலும் பழக்கமில்லாத ஆறு என்பதாலும் ( நீர் சுழல் மற்றும் நீருக்கடியில் இருக்கும் பாறைகள் பற்றி தெரியாது) அதிக தூரம் நீந்த முடியவில்லை. சற்று உள் சென்றாலும் நீ நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. எங்காவது பாறைகளை பிடித்துக் கொள்ளலாம் என்றாலும் அவைகளில் பாசிப் படிந்து இருக்கிறது. ஆனாலும் முடிந்த வரை ஆட்டம் போட்டோம். 4.30 மணிக்கு மேல் யானைகள் தண்ணீர் குடிக்க வரும் என்பதால் வெளியேற வேண்டும் என்றார்கள். அவைகளுக்கு எப்படி 4.30 ஆச்சின்னு தெரியும்? காட்டில் பெரிய கடிகாரம் இருக்குமோ? :) ( அய்ய.. மொக்கைடா சாமி ). மதியம் செம கட்டு கட்டியதாலும் ஆற்றுக் குளியலில் அதிக நேரம் செலவிட்டதாலும் மலையேற்றம் செல்லவில்லை.

வழியில் காரமடையில் காஃபி குடித்துவிட்டு கோவையை அடைந்தோம். ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். நேரம் போனதே தெரியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை எங்குமே நேர விரயம் இல்லை. மிகச் சரியாக இருந்தது.

சுருக் தகவல்ஸ்
  • கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
  • மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.
  • பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300
  • 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200
  • 10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.
  • பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
  • வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.
  • தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : திரு. சீனிவாசன் : +91 9047051011
  • தகவல்களுக்கு : http://coimbatoreforests.com/baralikaduEco.htm
நாம் செலுத்தும் கட்டணத்தில் பரிசல் ஓட்டுபவர்களுக்கு 150 ரூபாயும் உணவிற்கு ஒருவருக்கு 100 ரூபாயும் தருகிறார்களாம். மீதம் உள்ள பணம் அந்த பகுதி மக்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்களாம். பரிசல் ஓட்டுபவர்கள் வார இறுதியில் இங்கும் மற்ற நாட்களில் வெளி வேலைக்கும் செல்கிறார்கள். உணவு கொடுத்த சுய உதவிக் குழுவினர் 2 ஆண்டுகளுக்கு முன் 10,000 முதலீட்டில் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் 100 ரூபாயில் ஒருவருக்கான உணவுக்கு 35 ரூபாய் எடுத்துக் கொண்டு மாத சம்பளமும் எடுத்துக் கொண்டு உபரியாக ரூபாய் 80,000 சேமிப்பில் வைத்திருக்கிறார்களாம். சபாஷ்.

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.

மொத்தத்தில் அரசு நடத்தும் சுற்றுலாப் போல இல்லாமல் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து குடும்பத்தில் ஒருவர் போல பழகிய திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் சேவையைப் பாராட்டினால்தான் இப்பதிவு முழுமை பெறும்.

டிஸ்கி: இதுவரை பல சுற்றுலாப் பதிவுகள் எழுதி இருந்தாலும், உரையாடல்கள் எல்லாம் எழுதி படிப்பவர்களைக் கொட்டாவி விட வைக்கும் மோசமான பதிவுகளாகவே எழுதி இருக்கிறேன். சுற்றுலாப் பயணங்கள் பற்றிய பதிவுகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனபதற்கு தோழி. MITR பதிவுகளே சான்று. பிரமிக்க வைக்கும் வகையில் அற்புதமாக விவரங்களுடன் எழுதுகிறார்.அவரைப் போல் ஒரு பதிவாவது வாழ்வில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் முயற்சி இந்தப் பதிவு. பல இடங்களைப் பற்றி அந்த ஊர்க்காரர்களுக்கே தெரியாத தகவல்களுடனும் படங்களுடனும் எழுதி இருக்கிறார்.

மேலும் படங்களுக்கு :

Read more...
Powered by Blogger.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP