Mini Meals v 2.12.09
பொழுது போக்கிற்கு பதிவுகள் எழுதுபவர்கள் கூட , பதிவுக்காக குறைந்த பட்சம் கூட தகவலுக்காக உழைப்பதில்லை என சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். விகடன் மாதிரி காசுக்கு விற்கும் பத்திரிக்கைகள் கூட அவ்வாறு தான் இருக்கின்றன. சில வாரங்கள் முன்பு ஜூனியர் விகடனில் “ 300 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஐநா சபை மாநாட்டில் திருமாவளவனும் பங்கேற்றதாக” எழுதி இருந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நாடுகளை கண்டுபிடித்து அதை விகடன் ரகசியமாக வைத்திருக்கிறது போல. சமீபத்தில் ஆனந்தவிகடனில் உளவாளி என்னும் இணைப்பு இதழ் வழங்கினார்கள். அதில் ரஷ்யாவின் உளவு நிறுவனம் 1953ல் தோற்றுவிக்கப் பட்டதாவும் இரண்டாம் உலகப் போரின் அதன் பங்கு முக்கியமானது எனவும் எழுதி இருந்தார்கள். விகடனுக்கு மட்டும் சிறப்புப் போராய், இரண்டாம் உலகப் போர் 1953க்கு பிறகு தான் நடைபெற்றதோ?. என்ன அக்கப்போரய்யா இது?
சமீபத்தில் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி விளக்குகள் எரியாததால் சிறிது நேரம் போட்டி பாதிக்கப் பட்டது. மொத்தமிருந்த 4 விளக்கு கோபுரங்களில் 3 கோபுரங்கள் எரியவில்லையாம். அதன் பிறகு டில்லி கோட்லா மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, மோசமான பிட்ச் தயாரிப்பால் ரத்து செய்யப் பட்டது. ஒரு சர்வதேசப் போட்டி மைதானத்தின் பிட்ச் கூட கவனிக்காமல் எப்படி விளையாட அனுமத்தித்தார்களோ? லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொழுத்துக் கிடக்கும் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் மெத்தனமே காரணம். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கு காமென்வெல்த் போட்டிகளில் இன்னும் எவ்வளவு சொதப்ப போகிறார்களோ? இந்த லட்சனத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சிக்கிறார்களாம். இந்திய விளையாட்டுத் துறைக்கு எப்போ விடிவுகாலம் வருமோ?
பாவம் பாரதிய ஜனதா கட்சி. எற்கனவே இந்திய மக்களால் புறக்கணிக்கப் பட்டுவிட்டது. அதோடு நில்லாமல் உள்கட்சி பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர் என்று அதன் நிறுவனர்களில் ஒருவரான அத்வானிக்கே தெரியவில்லை. அவரையும் கைபுள்ள ஆக்கிட்டாங்க. ஆர்எஸ்எஸ்-ன் மோகன் பகவத் தான் இப்போது பஜகவின் சுப்ரீம் லீடராக செயல்படுகிறார். இப்படி துக்கம் தொண்டையை அடைக்க அரசியல் செய்யும் அவர்கள் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு சிபுசோரனிடம் ஐக்கியமாகி இருக்கிறார்கள். சிபுசோரனைப் பற்றி தெரிந்தும் அவருடன் கூட்டு வைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும் தான் என்றாலும் இது சொந்த செலவில் சூனியமும் கூட. ஏந்தான் இப்படி ஆப்பைத் தேடிப் போய் அமர்கிறார்களோ?
காவல் துறை உயரதிகாரி ரத்தோர் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான ருச்சிகா என்னும் சிறுமி, அதன் பின் நடந்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி 1993ல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணமான ரத்தோருக்கு 6 மாதம் சிறதண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்தோரைவிட இந்தத் தீர்ப்பளித்த நீதிபதி தான் மிகப் பெரும் குற்றவாளி. இந்தக் கொடுமை இவர் மகளுக்கோ பேத்திக்கோ நடந்திருந்தால்( யாருக்கும் நடக்கக் கூடாத கொடுமை) இப்படித் தான் தீர்ப்பளித்திருப்பாரா?. நீதிபதிகளை விமர்சிக்கக் கூடாதாம். அதெல்லாம் அந்தக் காலம். நீதிபதிகள் நீதி அரசர்களாக மதிக்கப் பட்டார்கள். இப்போதைய நீதிபதிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அப்படிப் பட்டவர்களை விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வழக்கில் ரத்தோருக்கு ஆஜரானவர் ராம்ஜெத்மலானி. தன் வழக்காடும் அறிவை காசுக்காக எப்படி விற்கிறார் பாருங்க. ருச்சிகாவை பள்ளியில் இருந்து நீக்கியதற்காக அந்த பள்ளியின் மீது இப்போது வழக்குத் பதிவு செய்யப் பட்டுள்ளது. ரத்தோர் சொல்லி தான் நீக்கியதாக அந்த பள்ளி விளக்கம் சொல்கிறது. என்னக் கொடுமை.
ஒகேனக்கல்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குறிப்பிடத்தக்கது. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் (விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது) அருகில் உள்ளது. தர்மபுரி மாவட்ட மக்கள் இதை காவேரி என்று தான் அழைக்கிறோம். இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப் படுகிறது. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடம் தான் ஒகேனக்கல். பேரிரைச்சலுடன் ஐந்தருவிகளில் இருந்து விழும் நீரைப் பார்க்க அழகாய் இருக்கும். பரிசலில் பயணம் செல்லலாம். மீன் உணவுப் பிரியர்களுக்கு ஏற்ற இடம். பல வகையான மீன்களை மிகவும் சுவையாக சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆயில் மசாஜ் செய்வதற்கு புகழ்பெற்ற இடம். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தருமபுரியில் உள்ள அதியமான் கோட்டத்தையும் பார்வை இடலாம்.
தருமபுரியிலிருந்து 45கிமீ , சேலத்திலிருந்து 113கிமீ மற்றும் பெங்களூரில் இருந்து 133கிமீ தொலைவில் உள்ளது.
ஒகேனக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தங்கலாம். 6 படுக்கைகள் கொண்ட ஃபேமிலி ரூம் 1000 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கிறது . இருவர் தங்கும் அறைகளும் உள்ளன. தனியார் ஹோட்டல்களும் உள்ளன. ஒருநாள் பயணமாக செல்பவர்கள் தருமபுரியில் தங்கலாம். ஏராளமான ஹோட்டல்கள் இருக்கின்றன.
தொடர்புக்கு :
Hotel TamilNadu : 04342 - 2564447
பயணப் பதிவுகளுக்கான என் குருவின் ஒகேனக்கல் சுற்றுலா அனுபவம் படிக்க..

























