February 22, 2010

நம்பிக்கை நட்சத்திரம் ஜோதிமணி

''அமராவதி ஆற்றங்கரையின் ஒரு கிராமத்துல பிறந்த நான், தேசிய அரசியலை எட்டிப்பிடிப்பேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இன்னிக்கு நான் இந்தியத் தலைநகர் டெல்லியில் இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளராக இயங்குகிறேன். ஆனால், அதைவிட என் சொந்தக் கிராமத்துல 15 வருஷமா குடிக்கத் தண்ணி இல்லாம தவிச்ச தலித் மக்களுக்காகப் போராடி, குடிதண்ணீர் வாங்கித் தந்ததுதான் என் மனசுக்கு நிறைவளிக்கும் விஷயம்!''- படபடவெனப் பேசுகிறார் ஜோதிமணி. இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்களில் ஒருவர். அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்பும் இத் தலைமுறை இளைஞர்களைப்போல் அல்லாமல், நேரடி அரசியலில் இயங்கும் ஜோதி, ஓர் எழுத்தாளர். தனது கிராமத்தில் நடத்திய தண்ணீர் போராட்டத்தை 'நீர் பிறக்கும் முன்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

''கரூர் மாவட்டம் பெரிய திருமங்களம்தான் நான் பிறந்த கிராமம். அப்பா விவசாயி. பொருளாதாரரீதியாக கஷ்டம் இல்லாத குடும்பம்தான். படிப்பில் ஆர்வம் உண்டு. எப்பவும் நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் தான். உடுமலைப்பேட்டை கல்லூரியில் படிக்கும்போது போட்டியே இல்லாமல் கல்லூரித் தேர்தலில் ஸ்டூடன்ட் செகரெட்டரி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்.எஸ்.எஸ். கேம்ப்புக்காகப் போனப்ப சாதாரண மக்களோடு தங்கி, அவங்ககூடவே சாப்பிட்டு, வேலை பார்த்துக் கழித்த சில நாட்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அடுத்த முறை எங்க ஊருக்கு வந்தப்போ, ஊரே எனக்குப் புதுசாத் தெரிஞ்சது.

எங்க கிராமத்தோட தலித் மக்கள் 15 வருஷமா அவங்க காலனிக்குக் குடிதண்ணீர் குழாய் கொண்டுவரணும்னு போராடிட்டு இருந்தாங்க. ஒரே ஒரு குழாய்கூட இல்லாம பல கி.மீ. நடந்து போய் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை. அவங்களுக்கு பைப் கனெக்ஷன் கொடுப்பதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனாலும், யாருக்கும் தண்ணீர் கொடுக்க மனசு வரலை. 'சரி, நம்மால் என்ன பண்ண முடியும்?'னு யோசிச்சப்பதான் 'இந்தப் பிரச்னையைத் தீர்க்க கையில் அதிகாரம் அவசியம்'னு புரிஞ்சது. அந்த வயசுக்கு 'அதிகாரம் கையில வந்தா, நாமளும் ஒரு எம்.ஜி.ஆர். மாதிரி ஆயிடலாம்'ங்கிற அளவுக்குக் கற்பனை. 'உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போறேன்'னு சொன்னதும், வீட்ல பயங்கர எதிர்ப்பு. சொந்தக்காரங்க எல்லாம் ஷிஃப்ட் போட்டு அறிவுரை சொன்னாங்க. 'நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களுக்கு அரசியல் எதுக்கு?'கிற கேள்வியை ஒரு நாளைக்கு 100 தடவை என் காதால் கேட்டேன். ஆனாலும், என் முடிவில் கடைசி வரைக்கும் உறுதியா இருந்தேன். 5,000 ஓட்டுக்கள்கொண்ட ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் பண்ணேன்.

மக்களிடம் பேசினால், 'நீ இல்ல, உங்க ஊர்லேர்ந்து எவன் நின்னாலும் ஓட்டு போட மாட்டோம்'னு கறாராச் சொன்னாங்க. தினம் தினம் மக்களோடு பேசுவேன். தீர்வு அப்புறம், அவங்களோட பிரச்னையைக் கேட்கவே ஆள் இல்லைங்கிற உண்மை புரிஞ்சது. கடைசியில வீடு, சொந்தக்காரங்க எல்லாரும் எனக்காகத் தேர்தல் வேலை பார்க்க முன் வந்தாங்க. 'நான் அஞ்சு ஆயிரம்தான் செலவு பண்ணுவேன். சாராயம் வாங்கித் தர்றது, பணம் தர்றது எல்லாம் பண்ண மாட்டேன்'னு சொல்லிட்டேன். தேர்தல் முடிஞ்சு முடிவு வந்தது. நான் ஜெயிச்சேன்.

ஆனா, ஜெயிச்சு எட்டு மாசம் வரைக்கும் என்னால் எதுவுமே பண்ண முடியலை. தாசில்தார் ஆபீஸ்ல என்கிட்ட எதாவது பொய் சொல்லி ஏமாத்துவாங்க. உள்ளூர் தலித் மக்கள், 'என்னமோ தண்ணீர் கொண்டுவர்றேன்னா... ஒண்ணுத்தையும் காணோம்'னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதிகாரம் மட்டுமே எதையும் சாதிக்காதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் தாசில்தார் ஆபீஸ் போய் சண்டை போட்டு, போராட்டம் நடத்தி, மனு போட்டு, பல ஊழல்களைக் கடந்து பைப் லைன் கொண்டுவர மூன்றரை வருஷமாச்சு. தண்ணீர் வந்த முதல் நாள் அழுகையும் மகிழ்ச்சியுமா ஒரு சினிமாபோல இருந்தது. அதுக்குப் பிறகு என்னோட ஒன்றியக் கவுன்சிலுக்கு உட்பட்ட மத்த கிராமங்களின் தலித் குடியிருப்புகளுக்கும் குடி தண்ணீர் பைப்லைன் போட்டாங்க.


அடுத்த தடவையும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சேன். அந்தச் சமயத்தில் அமராவதி ஆற்றில் அரசாங்கம் மணல் அள்ளத் திட்டம் போட்டுச்சு. 'அரசு எடுத்தாலும், தனியார் எடுத்தாலும் ஆத்துல மணல் எடுக்குறது எங்க விவசாயத்தைப் பாதிக்கும்'னு சொல்லி, மக்களைத் திரட்டிப் போராடி, அந்த பொக்லைன் இயந்திரத் தைத் தடுத்தோம். பிறகு, நானே கோர்ட்டில் கேஸ் போட்டு, அமராவதி ஆற்றில் மணல் அள்ள நிரந்தரத் தடை ஆணை வாங்கினேன். இப்போ வரை எங்க ஊர் ஆத்துல யாரும் மணல் அள்ளுறதில்லை.

ஆரம்பம் முதலே எனக்கு காந்தியக் கொள்கைகள் மேல ஈர்ப்பு உண்டு. நான் முதல் தடவை தேர்தலில் போட்டியிடும்போதே தமிழ் மாநில காங்கிரஸோட வேட்பாளர்தான். அடுத்த தடவையும் த.மா.கா-வில் நின்னுதான் ஜெயிச்சேன். மூன்றாவது முறையா போட்டியிட்டப்போ, மணல் கொள்ளை நடத்தினவங்க உள்பட சகலரும் எனக்கு எதிரா ஒண்ணு சேர்ந்துட்டாங்க. நான் தேர்தலில் தோற்றேன். ஆனா, நான் எந்தக் காலத்திலும் பதவிதான் அரசியல்னு நினைச்சது இல்லை. நான் த.மா.கா-வில் இருந்த சமயத்திலேயே எனக்கு ப.சிதம்பரத்தைத் தெரியும். 'சின்னப் பொண்ணு'தானேன்னு நினைக்காம, நான் சொல்ற விஷயங்களையும் காது கொடுத்துக் கேட்பார். அவர் வழிகாட்டுதல் இல்லைன்னா, நான் என்னிக்கோ அரசியலில் இருந்து வெளியேறி இருப்பேன். 2001-ல் அவர் த.மா.கா-வில் இருந்து வெளியேறி 'காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை'யை ஆரம்பிச்சப்போ என்னை கரூர் மாவட்டச் செயலாளரா நியமிச்சார். 25 வயசுல ஒரு கட்சிக்கு மாவட்டச் செயலாளரா இருந்ததை இன்னிக்கு நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கு.


2006-ல் இளைஞர் காங்கிரசுக்குள்ள வந்தேன். இரண்டு வருஷம் பரபரப்பான இளைஞர் காங்கிரஸ் பணிகள். மாநிலத் துணைத் தலைவரா இருந்தேன். அப்போதான் ராகுல்ஜி இந்திய யூத் காங்கிரஸின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஹைதராபாத்தில் ஒரு மீட்டிங். ஆந்திராவின் தலித் குடியிருப்புகளில் சில நாட்கள் தங்கி அந்த அனுபவங்களைப் பேசணும். இதற்காக நாடு முழுக்க 1,800 பேர் அழைக்கப்பட்டு இருந்தாங்க. ராகுல்ஜி முன்னிலையில் நடந்த அந்த மாநாட்டில் பேசிய 17 பேரில் நானும் ஒரு ஆள். அதன் பிறகு, ஐந்து எம்.பி-க்கள்கொண்ட குழு நாடு முழுவதும் இருந்த யூத் காங்கிரஸ் பொறுப் பாளர்களிடம் டேலன்ட் டெஸ்ட் நடத்தியது. என் முறை வந்தபோது 'ஜோதிக்கு டெஸ்ட் வேண்டாம். அவங்க டேலன்ட்தான் நமக்குத் தெரியுமே' என்று நேரடியாக என்னைத்தேர்ந் தெடுத்தார் ராகுல். அப்படித் தேர்ந்தெடுக் கப்பட்ட 22 பேரை இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்கள் ஆக்கி னார்கள். இந்த 22 பேர் கமிட்டிதான் இளைஞர் காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை நிர்வாக அமைப்பு. அதில் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நான்.

எங்கள் கிராமத்தில் சதாசிவம் என்றொரு எம்.எல்.ஏ. இருந்தார். மூன்று முறை எல்.எல்.ஏ-வாக இருந்த அவர், வாழும் காலம் வரை ஊழல் இல்லாமலும் எளிமையாகவும் வாழ்ந்தார். அவர்தான் எனக்கான அரசியல் முன்னோடி. 'நான் ஜோதி ஆனது எப்படி?' என்ற கேள்விக்கு 'சதாசிவம் ஐயா' என்ற ஒரு வார்த்தை பதில்தான் மிகப் பொருத்தம். அரசியலை இன்றைய இளைய தலைமுறை வெறுக்கிறது. ஆர்வம் காட்ட மறுக்கிறது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வீட்டைச் சுத்தப்படுத்துவதும், வீதியைச் சுத்தப்படுத்துவதும், நாட்டைச் சுத்தப்படுத்துவதும் நம் கடமை. நான் என் வீடு தாண்டி வீதியையும் சுத்தப்படுத்த விரும்பினேன். விருப்பம் இருந்தால் வாருங்கள், ஊழல் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்குவோம்!''

நன்றி : பாரதிதம்பி & ஆனந்தவிகடன் 

டிஸ்கி : ஜோதிமணி தற்போது கேரள இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராகவும் அஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

17 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நம்பிக்கையூட்டும் நல்லதொரு பகிர்வு.

(நீயும்தான் இருக்கியே மாமா?)

SanjaiGandhi™ said...

Thanks Athi mams.. one day u ll write about me :)

அன்புடன் அருணா said...

mm Inspired!

க.இராமசாமி said...

நல்ல பகிர்வு.

கலகலப்ரியா said...

good 1

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல பதிவு.

அப்படியே ’ஆமுகி’யை ரிப்பீட்டிக்கிறேன். :)

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

தல, இந்த "ஆ" வும், "வி " யும் அவங்க தொப்பிய ஒரு நாளைக்கு தூக்கி போட்டு வரவேற்பாங்க பாருங்க ! ( இது அப்துல் கலாம் கனவுங்க )

Mrs.Menagasathia said...

good post!!

அகநாழிகை said...

சஞ்சய், விகடனில் ஏற்கனவே வாசித்தேன். பகிர்வுக்கு நன்றி.
ஜோதிமணியை, ஞாநி இல்லத்தில் ஜெயமோகன் பங்கேற்ற ‘கேணி‘ இலக்கிய கூட்ட நிகழ்வில் பார்த்தேன்.

இய‌ற்கை said...

//one day u ll write about me :)//


ippo elutharathu ellam pothatha?

இய‌ற்கை said...

valthukal jothimani:-)

க.பாலாசி said...

அவங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற....

கண்ணகி said...

ஜோதிமணிக்கு வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

நல்ல கட்டுரை

சார் அதுதான் சாரி கேட்டன்ல அப்புறம் ஏன் நம்ம வீட்டு பக்கமே வரமாற்றிங்க (மங்குனி அமைசெரே நீ மங்குனி என்பதை நிருபித்துவிட்டாய் . எவ்வளவு நேரந்தான் பகுமானமாவே நடிக்கிறது )

periyamaruthu said...

Sanjai one question to present day congresswala.

One knows the contribution and the sacrifices congressmen made to gain independence.Wht saddens me is that congress which made great sacrifices has sacrificed patriotism and concern for Indian people.

SanjaiGandhi™ said...

நன்றி அருணாக்கா..

நன்றி ராமசாமி

நன்றி ப்ரியா

நன்றி விக்னேஷ்வரி.. அவருக்கு சொன்ன அதே பதில் உங்களுக்கும் :)

நன்றி ஷர்புதீன்.. அவர் கனவை நிறைவேற்றுவோம்.

நன்றி மேனகா சிஸ்டர்..

SanjaiGandhi™ said...

நன்றி வாசு சார்.. அவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமாம்.. விருதுகள் கூட வாங்கி இருப்பதாக சொன்னார்.. அன்றைக்கு கட்சிப் பணிகளுக்கு இடையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால் , நேரக் குறைவால் யாருடனும் பேச முடியவில்லை என்று வருத்தப் பட்டார்.

நன்றி இயற்கை..

நன்றி பாலாசி

நன்றி மங்குனி அமைச்சரே..( இது போன்ற பெயர்களை தவிர்த்து உங்கள் சொந்தப் பெயரிலேயே எழுதலாமே நண்பரே) நேரக் குறைவால் தான் உங்கள் பதிவு பக்கம் வரவில்லை நண்பரே. வேறு காரணங்கள் இல்லை.. விரவில் வருகிறேன்.. அன்புக்கு நன்றி..

நன்றி பெரிய மருது. உங்கள் கருத்தை தான் சொல்லி இருக்கிறீர்கள். இதில் கேள்வி எதும் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்கள் கடைசிக் கருத்தில் உடன்பாடில்லை. காங்கிரஸ் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இருந்தால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்கள் கூடுதல் இடங்கள் அளித்து தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். எதிர்கருத்தை நாகரிகமாக வைக்கும் உங்கள் குணத்தை பெரிதும் மதிக்கிறேன். மீண்டும் நன்றி.

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget