June 17, 2010

இது பொம்பளைங்க சமாச்சாரம்..

தோழி ஒருத்தியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது , பெண்களை பற்றி இழிவாக பேசினால் தான் பொங்கி எழுந்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் எதும் இழிவாக பேசவில்லை. பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக அவர் அப்படி சொன்னார். எதிர்காலத்தில் மகளிர் சங்கத்தில் சேர்ந்து பெண்களுக்காக சேவை செய்யப் போவதாக சொன்னார். வாழ்த்துக்கள்.. :)

எனக்கு தெரிந்தவரையில் மாதர் சங்கம் என்றால் சமுதாயத்தில் பிரபலமானவர்களுக்கு எதிராக மட்டுமே போராடும் சங்கம் தான். தினம் தினம் எத்தைனையோ ஏழை பெண்களுக்கு ஆண் மக்களால் அல்லது மாமியார்களால் பல கொடுமைகள் நடக்கிறது. அதை எல்லாம் அவர்கள் எதிர்ப்பதில்லை. இவர்கள் போராட்டம் நடத்தும் சம்பவத்தில், ஒன்று பாதிக்கப்பட்டவர் பிரபலமானவராக இருப்பார் அல்லது குற்றவாளி பிரபலமாக இருப்பார். அப்போது தான் இவர்கள் வீதிக்கு வருவார்கள். அப்போ தானே இவர்களுக்கும் பப்ளிசிட்டி கிடைக்கும்?...

அதனால்.. இந்த வகை பெண்ணியவாதியாகத் தானே வரப் போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒரு திட்டத்தை சொன்னார். ரொம்ப அற்புதமான திட்டம். முயன்றால் செயல்படுத்தவும் முடியும்...

திட்டம் இது தான் :
1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்(Sanitary napkins) விநியோகிப்பது. கூச்சமாக உணர்ந்ததால் அவர் இதை பற்றி விரிவாக என்னிடம் எதும் சொலவில்லை. நானும் விட்டுவிட்டேன். அதான் இருக்கவே இருக்கிறதே இணையம்.. :)

உருப்படியான மேட்டராக பட்டதால் இணைய ஆராய்ச்சியில் இறங்கியதில் கிடைத்தவை..
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் அதிக flow இருக்கும் சமயங்களில் 4 முதல் 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை நாப்கின் மாற்ற வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு எவ்வளவு தேவை என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். கடைகளில் விற்கும் நாப்கின்கள் ஏழை பெண்கள் வாங்கும் நிலையில் இல்லை. கிராமங்களின் நிலை பற்றி சொல்லவே வேண்டாம். வாங்கும் நிலையில் வசதி இருந்தாலும் விற்பவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே ஏழை பெண்களும் கிராமத்து பெண்களும் சாதாரன துணிகளையே உபயோகிக்கிறார்களாம். அதையும் புதிது புதிதாக எல்லாம் உபயோகிப்பதில்லையாம். ஒரே துணியை துவைத்து உலர்த்தி பின் அதையே உபயோகிக்கிறார்களாம். இதனால் கிருமிகள் தோன்றி தொற்று நோய்கள் வருமாம். எவ்வளவு கொடுமையான விஷயம்?

ஆகவே தோழி சொன்னது போல் இதை 1 ரூபாய்க்கு விற்பதன் மூலம் பலரும் உபயோகிக்க வைக்க முடியும். அதையும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் தயாரித்து விற்றால் மலிவாகவும் விற்க முடியும் என்று சொன்னார்.. மேலும் சுய உதவிக் குழுக்களுக்கும் வருமானம் கிடைத்த மாதிரி ஆகும்... கிராமப் புற சுய உதவிக் குழு பெண்கள் மூலம் பிறரையும் நாப்கின் உபயோக படுத்த வைக்க முடியும்.

நான் கேட்பது...அதை ஏன் 1 ரூபாய்க்கு விற்க வேண்டும்? ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவே அரசாங்கம் தரலாமே. எய்ட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பிக்க இலவசமாக ஆணுரை வழங்கம் போது பெண்களின் ஆரோக்கியத்திற்காக இதை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது. ரேஷன் கடைகளில் விற்கும் போது கிராமத்து பெண்களும் நகரத்து ஏழை பெண்களும் எளிதில் வாங்கி உபயோகிக்க முடியுமே. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இதை தயாரிக்க பயிற்சி அளித்து அவர்களிடமே அரசங்கம் இதை வாங்கி அவர்களுக்கும் வருமானத்திற்கு வழி செய்யலாம். ஆனால் இதை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் இதற்கு தடையாக இல்லாமல் இருக்கனும்.

1 ரூபாய்க்கு அரிசி கொடுக்க நிதி இருக்கும் போது அரசாங்கத்திற்கு இதற்கு நிதி இருக்காதா?.. ஒரு வேளை அரசாங்கத்திற்கு இந்த யோசனை இல்லாமல் கூட போயிருக்கலாம். ஆனால் வாய் கிழிய பேசும் பெண்ணிய வாதிகள் இதற்கு என்ன முயற்சி எடுத்தார்கள்?.

டிஸ்கி : இது ஒரு மீள்பதிவு - செப்டம்பர் 2008ல் எழுதிய பதிவு இது.. இந்த செய்தியை படித்த போது மீள்பதிவிடத் தோன்றியது.

13 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

mmm! Good!

சென்ஷி said...

http://www.mum.org/ifmencou.htm

மேலே உள்ள சுட்டியில் இருப்பது அமெரிக்க பெண்மணி ஒருவர் ஆண்களுக்கு மாதவிலக்கு வந்தால் அரசாங்கம் என்னென்ன சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கும் என்று கற்பனைப் பட்டியலிட்டுள்ளார். (நன்றி: பண்புடன் செல்வன்)

****

தமிழாக்கம் செய்வதவர் செல்வன்

எனக்கு தான் உன்னை விட அதிக நாட்களுக்கு மாதவிலக்கு நடக்கிறது என பெருமையடித்துகொள்வார்கள்.

அரசாங்கம் ஆண்களுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கும்

மாதவிலக்கு ஆண்மையின் சின்னமாக கருதப்படும்

கவிஞர்கள் மாதவிலக்கை புகழ்ந்து கவிதை பாடுவார்கள்.நாவல் எழுதுவார்கள்.இலக்கியம் படைப்பார்கள்.அது ஒரு பெருமைக்குரிய விஷயமாக மாறிவிடும்

மாதவிலக்கு ஆண்களுக்கு மட்டும்வருவதால் அது சிறப்பு தகுதியாக கருதப்பட்டு அவர்களுக்கு வேலைகளும்,படிப்பிலும், மற்ற விஷயங்களிலும் முன்னுரிமை வழங்கவேண்டும் என ஆணாதிக்கவாதிகள் வாதாட ஆரம்பிப்பார்கள்.பூசாரியாக ஆணுக்கு கடவுள் கொடுத்த சிறப்பு தகுதி தான் மாதவிலக்கு என மதவாதிகள் வாதிடுவார்கள்.

மாதவிலக்கின்போது உடலுறவு கொள்வதுதான் ஜாலி என ஆண்கள் பெண்களை வலியுறுத்துவார்கள்.

லெஸ்பியன் பெண்களை ரத்தத்தை கண்டு பயந்து ஆண்களை விட்டு விலகிவிடுவதாக ஆண்கள் கூறுவார்கள்.

(டென்சனாவாதீங்க....இது நான் எழுதலை.பிரபல எழுத்தாளர் க்ளோரியா ஸ்டெனிம் எழுதின கட்டுரை.ஆங்கில மூலம் இங்கே..)

***

//. எய்ட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பிக்க இலவசமாக ஆணுரை வழங்கம் போது பெண்களின் ஆரோக்கியத்திற்காக இதை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது.//

நல்ல யோசனை.. செய்திப்பகிர்விற்கும் நன்றிகள் சஞ்சய்.

கல்வெட்டு said...

சஞ்செய்,

சஞ்செய்,

இது பொம்பளைங்க சமாச்சாரம் என்று சொல்வதை கண்டிக்கிறேன் ( ஆங் நான் என்ன வாத்தியாரா?) சரி கண்டனங்கள்.

ஏன் கண்டனம்?

பெண்களின் இந்த கருப்பை இரத்தப்போக்கு ( சுய சுத்திகரிப்பு) என்பது மனித குலத்துக்கு மிக ஆதரமான ஒன்று. அது இல்லாவிட்டால் நீங்களும் இல்லை நானும் இல்லை.

உண்டான முட்டை கருவாகத போது மறு கருவாக்கத்திற்கு (சுழற்சிக்கு) தன்னை தயார் படுத்திக்கொள்ளும் கருப்பையின் உன்னதமான விசயம் இது.

இதை தீட்டு என்றும் இதைப் பற்றிப்பேசுவதே தவறு அல்லது அருவருப்பானது என்றும் சில கூமுட்டைகள் பிரச்சாரம் செய்துவைத்துவிட்டன. நிச்சயம் நான் எனது அம்மாவிடம் பேச இயலாது. அவர்களின் காலம் வேறு ஆனால், சம காலத்தில் வாழும் தலைமுறையிடம் பேசலாம் ,இளையவரிடம் பேசலாம்.

இணையத்தில் பலர் பலமுறை பேசியுள்ளனர்.

*****

தகவலுக்கு....

இதில் உள்ள சுட்டிகள் எல்லாவற்றையும் படிக்கலாம் நேரமிருந்தால்.

இலவசமாக நாப்கின் திட்டங்கள் தமிழகம் முன்னோடி !!!
http://kalvetu.blogspot.com/2008/06/blog-post.html

.

Robin said...

நல்ல யோசனை!

~~Romeo~~ said...

ரேஷன் கடையில் விற்பது அவ்வளவு எளிது அல்ல என்று தோன்றுகிறது. கூச்ச சுபாவம் உள்ளவர்கள் கிராமத்து பெண்கள் அவர்களிடம் இதை கொண்டு சேர்ப்பதே பெரிய விஷயம். இதை அரசு தாமாக முன்வந்து இலவசமாக குடுக்க ஆரமித்தால் அப்பறம் வேறு எதாவதற்கு இலவசம் வேண்டும் என்று கேட்பார்கள். தொண்டு நிறுவனம் ஏதாவது முன்வந்து செய்தால் சரி.

ஜோசப் பால்ராஜ் said...

நீ எழுதுன இந்தப் பதிவை படிச்சுட்டு நானும் ஒரு பதிவு வேற எழுதியிருந்தேன்.
http://www.maraneri.com/2008/09/blog-post.html

இது குறித்து அருமையான ப்ராஜெக்ட் ரெடியா இருக்கு. எப்ப செய்யலாம்னு சொல்லு. செஞ்சுடலாம்.

கலகலப்ரியா said...

பெண்ணீயவாதிங்க எல்லாம் ஆண்களுக்கு எதிரா கொடி புடிச்சு போராடவே செரியா போயிடும்...

நல்ல விஷயம் அமைச்சரே...

வால்பையன் said...

தாராளமாக கொடுக்கலாம்!

manjoorraja said...

குவைத்தை சேர்ந்த ஒரு சேவை அமைப்பு சென்னையில் இதற்காக ஒரு தொழிற்சாலை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. மேல் விவரங்களை அக்காவிடம் கேட்டுக்கொள்ளவும்.

ஷர்புதீன் said...

.........கொடுக்கலாம்!

கோவி.கண்ணன் said...

நல்ல திட்டம் ஏழைப் பெண்களுக்கு இலவச உறிஞ்சுறையுடன், பெண்களுக்கான கீழ் உள்ளாடைகளையும் இலவசமாக தரலாம்

கொல்லான் said...

//இதை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது//
சஞ்சய், நீங்கள் எந்த நாட்டில் வாழுகின்றீர்கள்?
இலவசங்களுக்கு உரியவை என்பது, பொழுது போக்கத்தான் (உம் - டி. வி. ) தவிர, குறைந்த விலை விநியோகம் என்பதில், தினப்படி உபயோகம் இருக்க வேண்டும் (உம் - அரிசி). அப்போது தான் மக்கள் மனதில் ஓட்டு எண்ணம் வர வைக்க முடியும்.
இதெல்லாம் ...
அடப்போங்க சஞ்சய்.
இனிமேல் நாடு உருப்பட வழி சொல்லி உங்க நேரத்த வீனடிச்சுக்காதீங்க.

SanjaiGandhi™ said...

நன்றி அத்திவெட்டியாரே..

நன்றி சென்ஷி.. :))

நன்றி கல்வெட்டு.. உடனடியாக உங்க கட்டுரை படிக்கிறேன்.. நெட்ல மேட்டர் உள்ள ஆட்கள்ல முக்கியமானவர் நீங்க.. நிச்சயம் படிச்சிடறேன்.. நன்றி..

நன்றி ராபின்

நன்றி ரோமியோ

நன்றி ஜோசப் மாப்ள.. ப்ராஜக்ட் அனுப்பு.. பார்த்துட்டு சொல்றேன்..

நன்றி ப்ரியா.. பிரதமரை அமைச்சர் என்று சொல்லும் உங்கள் நுண்ணரசியலை கண்டிக்கிறேன்.. :)

நன்றி வால்..

நன்றி மஞ்சூர் அண்ணா.. கேட்கிறேன்..

நன்றி கோவியாரே..

நன்றி ஷர்புதீன்..

நன்றி கொல்லான் :)

TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget