Blog என்றால் என்ன என்ற புரிதலே இல்லாமல் பலர் இம்சை செய்கிறார்கள்.இதை எழுதாதே அதை எழுதாதே என உயிரை வாங்குகிறார்கள்.. எதாவது ஒரு சுட்டியை போட்டு, இங்கே எனக்கு முதுகு சொரிந்து விட்டுருக்கிறார்கள்.. சென்று நீங்களும் சொரியுங்கள் என ஒரு வரியில் பதிவு போடும் படைப்பாளிகளை இவர்கள் எதுவும் சொல்வதில்லை. இந்த வன்முறையாளார்களால் புதிதாக Blog ஆரம்பிப்பவர்கள் தங்கள் விருப்பப்படி எழுதவே தயங்குகிறார்கள். இவர்களுக்காகவே இந்த பதிவு..
சரி.. Blog என்றால் என்ன?
மற்றவர்களுடன் பொது வெளியில் பகிர்ந்துக் கொள்ளலாம் என நாம் நினைக்கும் எதையும் பிறர் மனம் புண்படாமல் சட்டத்திற்குட்பட்டு இணையத்தில் நமக்கான இடத்தில் எழுதி வைக்கும் இணைய சேவை தான் Blog.
Blog-ன் வகைகள்..
ஏராளமான பிரிவுகளில் தற்போது ப்ளாக் இயங்கினாலும் பொதுவாக இரண்டு வகைகளில் சொல்லிவிடலாம்.. 1. நிறுவனங்களின் வலைப்பூ. 2. தனிநபர் வலைப்பூ
1.நிறுவனங்களின் வலைப்பூக்கள்.
தங்கள் நிறுவங்கள் தொடர்பான தகவல்களை பிறருக்கு தெரியபடுத்த தங்கள் இணையதளத்தில் Blog வசதியை உபயோகிப்பார்கள். உதாரணம் : நிறுவனத்தின் செயல்பாடு, உயர் அதிகாரிகளின் கருத்துகள், நிகழ்ச்சிகள், புதிய திட்டங்கள், தங்கள் தயாரிப்புகள் பற்றிய கருத்துகள் & விளக்கங்கள், அறிவிப்புகள்.. etc.,
2. தனிநபர் வலைப்பூக்கள்
பிறருடன் பகிர்ந்துக் கொள்ளத்தக்க செய்திகள், நிகழ்வுகள், சுவாரஸ்யமான அனுபவங்கள், பொதுவான நாட்குறிப்புகள், தங்களுக்குப் பிடித்தவர்கள்/ பிடிக்காதவர்கள் பற்றிய கட்டுரைகள் போன்றவற்றிற்காக பயன்படுத்த தான் Blog சேவை.
பின்னர் இது இசையைப் பகிர, புகைப்படங்கள் பகிர, மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரிக்க, சந்தேகங்கள் உதவிகள் கேட்டு பின்னூட்டம் வழியாக தீர்வுகள் பெற, சமையல் குறிப்புகள் எழுத என விரிவடைந்தது.. இன்னும் கூட ஆங்கிலம் போன்ற மொழிகளின் இந்த வகைப் பயன்பாடு தான் பிரதானம்.
பின்னர் இதன் பலத்தை அறிந்த ஒரு கூட்டம் திடீரென தமிழ் வலைப் பதிவுலகுக்குள் பிரவேசிக்கிறது. இவர்களுக்குப் பெயர் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் இன்ன பிற கள்.. பொதுவாக சொன்னால்
“படைப்பாளிகள்”. பத்திரிக்கைகளுக்கு அனுப்பி தேறாமல் திரும்பி வந்த படைப்புகள் மற்றும் கை நமச்சல் தாங்காமல் தாங்கள் எழுதிக் குவிக்கும் படைப்புகள் போன்றவற்றை எந்தத் தடையும் இல்லாமல் பிரசுரிக்க ஒரு இடம் இருக்கே என இந்த கூட்டம் Blog சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தப் படைப்பளிகளின் புத்தகங்கள், அவர்களைப் பற்றிய செய்திகள் போன்றவற்றின் மூலம் அவர்களின் Blog முகவரிகளை தெரிந்துக் கொண்டு குபீர் குபீரெனு இன்னொருக் கூட்டம் தமிழ் பதிவுலகை முற்றுகையிடுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பெயர் தீவிர இலக்கிய வாசகர்கள்.
இந்த குபீர் வாசகர்களுக்கு Blog அறிமுகமாவதே மேற்க்கண்ட திடீர் எழுத்தாள ஆக்கிரமிப்பளார்கள் மூலம் தான். பின்னர் திரட்டிகளின் வழியே பிறர் Blog பக்கம் ஒதுங்கும் இந்த குபீர் வாசகர்களின் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. இவர்களைப் பொறுத்தவரை Blog என்பது படைப்பாளிகளின் உலகம். ஏனெனில் இவர்களுக்கு Blog அறிமுகமாவது படைப்பாளிகள் மூலம் தான். எனவே, பொழுதுபோக்காகவும் தங்கள் விருப்பப்படியும் எழுதிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் எல்லாம் இந்த படப்புலக சூழலின் எதிரிகள்.. நச்சுக் கிருமிகள் என நினைக்கிறார்கள்.. இவர்கள் ஆத்தும் சொற்பொழிவு தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது.
இவர்களின் பொதுவான அறிகுறிகள் சில,
- இப்படி மொக்கையை எழுதினால் வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது.
- இதனால் தான் எழுத்தாளர்கள் பதிவுலகை குப்பை என்கிறார்கள்
- நம் எழுத்து இந்த சமூகத்துக்குப் சமூத்திரத்துக்கும் பயன்படனும். இப்படி கிடைக்கும் வாய்ப்பை வீணடிக்கக் கூடாது
- இப்படி எழுதினால் உங்களுக்கு எந்த அங்கீ காரமும் கிருஷ்ணா ஸ்வீட்டும் கிடைக்காது..
- இதனால் பதிவுலகின் ஆரோக்கியம் கெட்டு அப்பலோ ஆஸ்பிட்டலில் படுத்துக் கொள்ளும்..
- இப்படித் தொடர்ந்து மொக்கையாக எழுதுவதைவிட நிறுத்திக் கொள்ளலாமே..............
என்றெல்லாம் சொற்பொழுவு ஆத்துவார்கள்.
எனக்கு சற்று ஓய்வுத் தேவை( இதை அறிவிக்காமல் கூட ஓய்வெடுக்கலாம்.. யாரும் நோட்டிஸ் அனுப்பி விடமாட்டார்கள் என்பது வேறு). எழுத்தில் வறட்சி தெரிகிறது... கேரள ஆயுர்வேத மருத்துவமனைகளில் மெருகேற்றிக் கொண்டு வருகிறேன்.. என்றெல்லாம் அறிக்கை விடுபவர்கள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். அவர்கள் Blog வசதியைப் பயனடுத்துவதே படைபாளியாகனும் என்ற அவர்களின் தனிப்பட்ட நோக்கத்தில் தான். அதனால் அவர்களை இந்த குபீர் வன்முறையாளர்கள் பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.. ப்ளாகர்கள்
அனைவரும் படைப்பாளிகளாக இருக்க வேண்டும் என்ற தவறான சிந்தனையைக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், இந்தப் படைப்பாளிகள் என்பவர்கள் வலைப்பதிவுலகை திடீரென ஆக்கிரமித்தவர்கள். இவர்களுக்காக யாரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இவர்களை நீங்கள் கண்டுக்கொள்ள வேண்டாம் ..நீங்கள் எழுதுவது பொதுவெளி என்பதால் உங்கள் எழுத்துக்கு வரும் எதிர்வினையை சமாளிக்க முடியும் என்றால் பிறர் மனம் புண்படாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடாமல் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் .. காலையில் செய்தித்தாளின் இரண்டாம் பக்கத்தை படிக்கவில்லை என்றோ பாத்ரூமில் தண்ணீர்வரவில்லை.. நாளைக்குள் சரிசெய்ய வேண்டும் என்றோ.. மதிய உணவில் காரம் அதிகம் என்றோ கூட உங்கள் வலைப்பூவில் எழுதுங்கள்....உங்கள் ப்ளாகில் என்ன எழுத வேண்டும் என தீமானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.. உங்களைத் தவிர.. எழுத்துப் பிழையைத் திருத்தும் நோக்கமின்றி பெரிய குறையாக சொன்னால் ஒரே பதில் தான்.. நான் வட்டார வழக்கில் எழுதுகிறேனே மம்மி என்று சொல்லிவிடுங்கள்.. இப்போ அதான் ட்ரெண்ட்.. :)
இப்படி எல்லாம் எழுதக் கூடாது அல்லது இப்படித்தான் எழுத வேண்டும் என யாராவது உங்களை வற்புறுத்தினால் கொஞ்சமும் தயவு தாட்சன்யம் பார்க்காதீர்கள்.. My Name Is Bloody Blogger, Not so called படைப்பாளி என்று சொல்லி மூக்கிலேயே குத்துங்கள்.. :))