மே 08, 2010 - தினமலர் கோவை மாவட்ட செய்தி
கோவையில், போலீஸ் முன்னிலையிலேயே இன்ஜி., மாணவர் மீது, ரவுடிக்கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர், அவசர உதவி கோரி போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, 'எல்லை பிரச்னையை' காரணம் காட்டி, உதவி மறுக்கப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த களேபரமும், போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களும், போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைகுலைய செய்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு 11.00 மணி(இன்று 08.05.2010). கோவை நகரில், மசக்காளிபாளையம் ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் 50க்கும் மேற்பட் டோர் போதை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு கும்பல், திடீரென அருகிலிருந்த வாலிபரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்க துவங்கியதும், பலரும் அலறியடித்து ஓடினர். தாக்குதலுக்குள்ளான வாலிபர் உயிர்தப்ப மசக்காளிபாளையம் ரோட்டில் அரை கி.மீ.,தொலைவுக்கு ஓட, விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் மரக்கட்டை, கற்களால் மூர்க்கத்தனமாக தாக்கியது.மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கடையின் ஷட்டர் மீது சரிந்த பிறகும், பலரது முன்னிலையிலும் தாக்குதல் தொடர்ந்தது. அதிர்ச்சியடைந்த சிலர், போலீஸ் 'கன்ட்ரோல் ரூமுக்கு' போனில் தெரிவித்ததும், அடுத்த 15வது நிமிடத்தில் ரமேஷ் என்ற போலீஸ்காரர் ரோந்து பைக்கில் வந்தார்.
அப்பகுதி களேபரமாக காட்சியளிக்க, அடிபட்ட வாலிபர் ரத்தம் சொட்ட, சொட்ட உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை சுற்றிநின்றிருந்த கும்பல், அப்போதும் தாக்கிக்கொண்டே இருந்தது.கும்பலை தடுக்கமுயன்ற போலீஸ்காரர் ரமேஷ் தள்ளப்பட்டு, அவரிடம் இருந்த'வாக்கி - டாக்கி'யும், மொபைல் போனும் தவறி விழுந்தது. பதற்றமடைந்த போலீஸ்காரர் 'வாக்கி - டாக்கி'யை தேடி எடுத்து கன்ட்ரோல் ரூம் போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது இயங்கவில்லை. அருகிலிருந்த ஒருவர் தனது மொபைல் போனை போலீஸ்காரரிடம் கொடுத்தார். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனை போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் ரமேஷ், உதவிக்கு போலீசாரை அழைத்தார். மறுமுனையில் பேசிய போலீஸ்காரர், 'அது எங்க 'லிமிட்' இல்லை; நீ சிங்காநல்லூர் போலீசுக்கு போன் போடு...' எனக்கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். மறுபடியும் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்த போலீஸ்காரர் விஷயத்தை சொல்ல, அடுத்த நிமிடமே 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறியது. அதன் பிறகும் கூட அப்பகுதிக்கான இரவு ரோந்துப்பணி உதவிக்கமிஷனர் முத்துராஜ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. எல்லாம் முடிந்து அரை மணி நேரம் கழித்து, பீளமேடு எஸ்.ஐ.,முத்துசாமியும், சிங்காநல்லூர் பெண் எஸ்.ஐ., பிரபாவதியும் சம்பவ இடத்துக்கு 'சினிமா போலீசாக' கடைசியில் வந்தனர்.
அதற்குள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாலிபரின் தந்தை, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடிவந்தார்; அவர், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார்.இவர் வந்த பிறகு தான், அடிபட்ட வாலிபர் சி.ஐ.டி., கல்லூரியில் பி.இ.,இறுதியாண்டு படிக்கும் மாணவர் பிரகாஷ்(19) என்பது தெரியவந்தது. தனது மகன் உயிருக்கு போராடுவதை கண்ட தந்தை, போலீசிடம் வாக்குவாதம் செய்து மகனை காப்பாற்ற கெஞ்சினார். ஆத்திரமடைந்த போலீசார், அவரை கழுத்தை பிடித்து தள்ளி ஜீப்பில் ஏற்றினர்; தாக் குதலில் ஈடுபட்டவர்கள் 'ஹாயாக' அருகிலேயே நின்றிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். அதன்பின் வேறுவழியில்லாமல், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றினர். அப்போது, சிங்காநல்லூர் எஸ்.ஐ., பிரபாவதியுடன் மொபைல் போனில் பேசிய இரவு ரோந்து இன்ஸ்பெக்டர், தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி கும்பலின் தலைவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அடுத்த விநாடியே ஜீப்பில் இருந்த தாக்குதல் கும்பல் விடுவிக்கப்பட்டது;
இத்தனையும், பலரது சாட்சியாகவே அரங்கேறியது. தாக்கிய நபர்களை விடுவித்தது தொடர்பாக அங்கிருந்த சிலர் போலீசிடம் கேள்வி எழுப்ப, 'அவர்கள் எங்கே போய்விடுவார்கள்; காலையில் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கிறோம்' என, பெண் எஸ்.ஐ., 'பொறுப்புடன்' பதிலளித்துள்ளார். இத்தனையும் நடக்கும் வரை, அடிபட்ட நபர் உயிருக்கு போராடியபடியே தரையில் சரிந்து கிடந்தார். அருகிலிருந்தோர் அவரை அரசு மருத் துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதை தடுத்த ஒரு எஸ்.ஐ., அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு மிரட்டல் தொணியில் கூறினார் (அரசு மருத்துவமனையில் சேர்த் தால், வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்பதால்). அவ் வாறே அந்த வாலிபர் தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், பின்னர் அவர் பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வளவுக்கு பிறகும் நேற்று மதியம் வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து, கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாதது ஆச் சரியமளிக்கிறது; இது தான், மாநகர போலீஸ்.
கேள்விக்கு என்ன பதில்? :
- போலீஸ்காரர் சம்பவ இடத்திலிருந்து அவசர உதவி கோரிய நிலையில், எல்லை பிரச்னையை காரணம் காட்டி வேறு போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளுமாறு, பீளமேடு போலீசார் கூறியது சரியா?
- ஒரு சம்பவம் நடந்திருப்பதாக 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறிய போது, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவிக்கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு வரவேண்டாமா? வராத நிலையில், அவர்களது அந்நேர பணி என்ன?
- சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த எஸ்.ஐ.,க்கள், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அருகிலேயே இருந்தும் கைது செய்யாமல், உயிருக்கு போராடிய வாலிபரின் தந்தையின் மீது ஆத்திரப்பட வேண்டிய அவசியம் என்ன?
- பொதுமக்களின் எதிர்ப்பால், தாமதமாக கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றிய ரவுடிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்காமல், சம்பவ இடத்திலேயே விடுவித்தது எந்த சட்டத்தின்படி சரி?
- பலர் முன்னிலையிலும் பிடிபட்ட ரவுடி கும்பலை விடுவிக்குமாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் போனில் உத்தரவிட வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன?
- தாக்கப்பட்ட வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகும் கூட, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசாரை தடுத்தது யார்?
- 'தாக்குதலுக்கு உள்ளான நபர் புகார் தரவில்லை; அதனால் வழக்குப்பதிவு செய்யவில்லை' என போலீசார் 'சாக்கு போக்கு' கூறலாம். அவ்வாறே இருந்தாலும், சம்பவத்தை நேரில் கண்ட போலீஸ்காரர் ரமேசிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
- 'இரவு 10.00 மணிக்கு 'டாஸ்மாக்' கடைகளை மூடிவிட வேண் டும்' என்ற அரசு உத்தரவை மீறி, நள்ளிரவு வரை நகரில் 'டாஸ்மாக்' பார்கள் போலீசுக்கு தெரியாமலா செயல்படுகின்றன?
- இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காதவாறு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
தினமலர் செய்தி : 08.05.2010
குறிப்பு : கோவையில் மரங்களோடு சேர்ந்து மனித நேயமும் கடமையும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. மரங்களை இழந்ததும் வாகன நெரிசலும் உடன் இது போன்ற அசாதாரான சூழலும் விரைவில் கோவை “வாழத்தகுதியற்ற” நகரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நேர்மையான சுறுசுறுப்பான மாவட்ட ஆட்சித்தலைவர், நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளும் நிலையில் மிக எளிமையான மாநகர மேயர், மிக நேர்மையான மாநகராட்சி ஆணையர் மற்றும் செயல்திறனும் நம்பிக்கையும் நேர்மையும் கொண்ட மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் இருந்தும் இந்த நிலை.. திரு. சைலேந்திர பாபு , கோவையின் காவல்துறை ஆணையராக பதிவியேற்ற போது கோவைவாசிகள் சந்தோஷமடைந்தார்கள். அவருக்கே இது சவால் தான்..
Read more...