August 30, 2010

போங்கய்யா நீங்களும் உங்க ம** புடுங்கற மனித உரிமையும்

கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கோவையில் இருந்து இரண்டு பேருந்துகள் கிளம்புகின்றன. ஒன்றின் மாணவர்களும் இன்னொன்றில் மாணவிகளும். அவர்கள் அனைவரும் கோவை விவசாயப் பல்கலைகழக மாணவர்கள். கல்விச் சுற்றுலாவுக்கான பயணம். ஆடிப்பாடி அரட்டையடித்து சந்தோஷமாக சில நூறு கிலோமீட்டர்களைக் கடந்து தருமபுரி நகரம் வந்தடைகிறார்கள். அங்கிருந்து மாணவர்களின் பேருந்து முன்னதாகவும் மாணவிகள் பேருந்து அதைத் தொடர்ந்தும் பையூருக்கு பயணம் தொடர்கிறது.  அடுத்த நாள் அவர்கள் பல புதிய ஆராய்ச்சிகளை காணப் போகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையை மாற்றியும் அமைக்கலாம். இன்னும் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் கூட வந்து சேர்ந்திருக்கவில்லை. நகரின் மையப்பகுதி..

 அவர்கள் மட்டுமின்றி யாருமே எதிர்பாராத வகையில் ஒரு கொலைவெறி கும்பல் அவர்களை மறிக்கிறது. பேருந்தின் அனைத்து பக்கமும் கற்கள் வீசப் படுகின்றன. கல்வீச்சில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மாணவிகள் ஜன்னல் திரைகளை மூடுகிறார்கள். அது தான் அவர்களுக்கு பெரும் ஆபத்து என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பேருந்தை மறிந்த அந்த மிருகங்கள் பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றுகின்றன. சில மிருகங்கள் தீயை கொளுத்துகிறார்கள். பேருந்து கொளுந்துவிட்டு எரிகிறது. உள்ளே மாணவிகள் அலறல். ஜன்னல் வழியே தப்பிக்கலாம் என்றால் தொடர்ந்த கல்வீச்சு. பிணம் திண்ணி கழுகுகளின் ஆட்டம் அடங்கவேயில்லை. வெகு விரைவில் பேருந்து முழுதும் தீ பரவிவிட்டது. யாராலும் வெளியேற முடியவிலை.

எதேச்சையாய் அதை கவனித்த மாணவர்கள் தங்கள் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிவருகிறார்கள். இந்த பிணம் திண்ணி நாய்கள் தப்பி ஓடுகின்றன. மாணவர்கள் எரியும் பேருந்தின் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். அதன் வழியே மாணவிகளை வெளியே இழுத்துப் போடுகிறார்கள். அனைவருக்கும் தீக்காயங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒருபுறம். தீக்காயங்களுடன் வெளியேறி, உள்ளே இருக்கும் உங்கள் உயிர்த்தோழிகளை மாணவர்களுடன் சேர்ந்து மீட்கப் போராடுவது இன்னொருபுறம். ஒருவழியாய் அனைவரும் வெளியேறிவிட்டார்கள் என மூச்சுவிட்டுக் கொண்டிருந்த போது திடீர் பரபரப்பு மாணவிகளிடம்.. எங்கே ஹேமலதா? எங்கே காயத்ரி? எங்கே கோகிலவாணி?

வகுப்புக்குப் போகாமல் மரங்களடியில் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். டேய் மச்சான், பாரதிபுரத்த்துகிட்ட யாரோ காலேஜ் பசங்க பஸ்ஸை கொளுத்திட்டாங்களாம்டா.. என்று யாரோ ஒரு மாச்சான் கத்தினான். மற்றவர்களுக்கும் தகவல் சொல்ல சொல்லிவிட்டு அங்கிருந்த சிலர் மட்டும் உடனே ஓடத்துவங்குகிறோம். அப்போது எல்லோருமே பேருந்துகளில் தான் கல்லூரி வருவோம். யாரிடமும் வாகனங்கள் இல்லை. அல்லது இருப்பவரைத் தேடிக் கொண்டிருக்க மன்மோ நேரமோ இல்லை. கல்லூரியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் சற்று கூடுதலான தூரத்தை அடைய ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாய் இருந்தது. எங்கும் மரண ஓலம். முகத்தில் உயிர் பயம். தேவைப் பட்ட உதவிகளை செய்துவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவனைப் பார்த்தேன். என் பள்ளித் தோழன். டேய் , நீ என்னடா பண்ற இங்க? என்று கேட்டது தான் தாமதம். மச்சான், அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்கக்கூட இருந்து என் ஃப்ரண்ட்ஸ் இப்போ எங்கள விட்டுப் போய்ட்டாங்கடா.. பயணம் செய்த மாணவர்களில் அவனும் ஒருவன். அங்கிருந்தவர்கள் முகத்தில் உயிர் பயத்தை மட்டும் பார்த்த என் நண்பர்களுக்கு உயிர்பலி அப்போது தான் புரிந்தது. அவன் பார்வை சென்ற திசை நோக்கி பீதியுடன் போய் பார்த்தேன். பேருந்தின் பின் நுழைவாயில். கதவு சாத்தி இருந்தது. மெதுவாக எட்டிப் பார்த்தேன். அது என் வாழ்வில் மறக்கவே முடியாத காட்சியாக இருக்கும் என அந்த நொடி வரை தெரியவில்லை. மூன்று மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் தீக்கு இரையாகிக் கிடந்தார்கள்.

தருமபுரி நகரத்தில் அதிமுகவில் பல அணிகள் இருந்தாலும் பெரும் அணிகள் இரண்டு உண்டு. SR வெற்றிவேல் (இவர் தந்தையை ரவுடி ரங்கன் என்பார்கள் , சமீபத்தில் நடந்த? உட்கட்சித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை தேர்தல் அலுவலகம் முன்பே வெட்டிக் கொன்றதாக கைது செய்யப் பட்டார் வெற்றிவேல் .) தலைமையில் ஒரு அணி. மிஸ்டர் எக்ஸ்( வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.. எனவே பெயர் தேவையில்லை )  தலைமையில் மற்றொரு அணி. வெற்றிவேல் வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது. மிஸ்டர் எக்ஸ் ஒதுக்கிவைக்கப் பட்டிருந்தார். மீண்டும் தன் விசுவாசத்தைக் காட்ட சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் துள்ளிக்குதித்த மிஸ்டர் எக்ஸ் தன் அல்லக்கைகளை ஏவி விடுகிறார். அந்தக் கூலிப்படை தன் வெறியாட்டங்களை நிகழ்த்த சிக்கியவர்கள் தான் இந்த அப்பாவி மாணவர்கள்.

குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிலருக்கு ஆயுள் தண்டனையும் சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப் படுகிறது. வழக்கு பேல் முறையீட்டுக்காக சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறது. மூன்று பேரின் மரண தண்டனைகள் உறுதி செய்யப் படுகிறது. மற்றவர்களின் தண்டனைகளில் சில மாற்றங்கள். பின்னர் வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு செல்கிறது. இப்போது உச்ச நீதி மன்றமும் இவர்களுக்கு மரண தண்டனையை உறுதிப் படுத்துகிறது.

இந்த மிருகங்களுக்கான இந்த தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன். அன்று இவர்கள் எங்கள் கையில் கிடைத்திருந்தால் நாங்களே கொன்றிருந்தாலும் கொன்றிருப்போம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நல்ல தீர்ப்பு வந்ததே. ஆனால் சாக வேண்டியவர்கள் இந்த மூவர் மட்டுமே இல்லை. இன்னும் சில பிணந்திண்ணிகள் தப்பிவிட்டன.

வழக்கம் போல் மனித உரிமை ஆர்வலர்கள் கூவ ஆரம்பித்து விட்டார்கள். எனக்குத் தெரிந்தவரையில் இவர்கள் பேர் தான் மனித உரிமை ஆர்வலர்கள். உண்மையில் மிருக ஆதரவு விளம்பரப் பிரியர்கள். மரண தண்டனையை எதிர்க்கிறார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சட்டம் தொடர்பானது இல்லை. உயிரைப் பறிக்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லையாம். அதுவும் கொலை தானாம். நல்லா சொல்றாங்க டீட்டெயிலு. சில நண்பர்கள் எழுதி இருப்பது போல், தண்டனை என்பது குற்றவாளியை திருந்த மட்டுமில்லை. அது போன்றக் குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் தான். மனிதனுக்கு இருக்கும் உச்சகட்ட பயமே உயிர் பயம் தான். உயிரோடு இருக்கத்தான் எல்லாம் செய்கிறார்கள். தன் செயலால் அந்த உயிரே போய்விடும் என்று தெரிந்தால் தயங்குவார்கள் அல்லவா?. ஆகவே சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம். 

இந்த சம்பவத்தில் இறந்த 3 பெண்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறார்கள். ஒருவேளை மற்றவர்களையும் காப்பாற்ற முடியாமல் போயிருந்தால்?. இந்த கூலிப்படையின் நோக்கம் இந்த 3 பெண்களை மட்டும் கொல்வதல்ல. ஒட்டு மொத்த மாணவிகளையும் கொல்வது தான். எனவே இதில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். 

இல்ல இல்ல.. என்ன காரணம் சொன்னாலும் மரண தண்டனை தவறு தான் என சொல்பவர்களுக்கு:  

போங்கய்யா நீங்களும் உங்க மசுரப் புடுங்குற மனித உரிமையும்..

August 27, 2010

மரங்களை வெட்டுங்கள் (பா ம க கவனத்திற்கு)


முன் குறிப்பு: இ-மெயிலில் வந்த இடுகை.

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை
நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக
தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '
என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்
நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில்
முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின்
வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட
ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம
மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி
தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை
எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று
பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை
கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து
கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர்
முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி
செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் ,
நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதி
ர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும்
போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ,
ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ
முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும்
கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை
மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!
அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை
வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை
கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை
கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே
என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை
அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை
செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

August 26, 2010

Express கூடல் - இந்தியன் எக்ஸ்பிரசில் கோவைப் பதிவர்கள்


சென்ற வாரத்தின் ஒரு இனிமையான மாலை வேளையில் நிர்மலா மகளிர் கல்லூரிக்கு அருகில் அட்மாஸ் உணவகத்தின் அழகான இயற்கை சூழலில்  இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தியாளர் அனுலா, கோவை வலைப்பதிவர்கள் சிலருடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரிய கப்பில் காஃபியும் ரம்மியமான இயற்கை சூழலும் நண்பர்களின் ஜாலியான உரையாடல்களும் அந்த மாலை வேளையை மேலும் இனிமையாக்கியது. அந்தக் கலந்துரையாடல் பற்றிய செய்தி 25.08.2010 அன்று இந்தியன் எக்ஸ்பிரசில் வெளி வந்திருக்கிறது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த அனுலாவுக்கு நன்றிகள். சந்திப்பு புகைப்படங்களுக்கு பழமைபேசி தளத்தை அனுகவும் :)

அங்கு தான் கோவை வலைப்பதிவர்களுக்கென கூடல் குழுமம் ஆரம்பிக்கும் எண்ணம் பிறந்தது. இப்போது நாங்கள் கூடலில் கூடிக் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறோம்.. :)

August 17, 2010

போகிற போக்கில் ஸ்பெஷல் : மணமகன் தேவை


நிறம் : சிகப்பு  
( செவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்களாம் )

ஜாதகம் : சுத்தஜாதகம்  
( தினமும் குளிக்க வச்சிருக்கனுமாம்)

மாத வருமானம் : 5 லட்சத்திற்கு மேல
( பொண்ணு தினமும் காலைல டீயும் தங்க பிஸ்கட்டும் தான் சாப்டுமாம் )

தொழில் : விவசாயம் & வியாபாரம்  
( கூகுள் CEOக்கு எல்லாம் பொண்ணு தர மாட்டாங்களாம் )

பொருந்தும் நட்சத்திரம் : கார்த்திகை. பூசம், சுவாதி.. இத்யாதி  
(வால்நட்சத்திரம் , அக்னி நட்சத்திரம், சினிமா/டிவி நட்சத்திரம் எல்லாம் பொருத்தமில்லையாம் )

எடை: 60 முதல் 75 கிலோ  
( தினமும் பொண்ணை தூக்கிட்டு 5 கிமீ வாக்கிங் போகனுமாம்)

படிப்பு : IAS/IFS/IPS/IRS/BE, MBA/ MBBS, MS 

( இதெல்லாம் படிச்சிட்டும் வெவசாயமும் வேபாரமும் பண்ணனுமாம்.. அப்புறம் இந்த ஐநா சபை செயலாளர், உலக வங்கி தலைவர் எல்லாம் வேஸ்டாம்.. வருமானம் இருக்காதாம்..)

உயரம் : 180 செமீ 
( ஆளு ஒசரமா இருந்தா வாசப்படியும் ஒசரமா இருக்குமாம்.. ஊடும் பெரிசா இருக்குமாம் )

தினமலரின் முதல் பக்கத்தில் கலர் விளம்பரம் குடுத்து எளிமையான முறையில் வரன் தேர்ந்தெடுக்க அனுகவும் கொங்குதிருமணம் டாட்டு காம்..


விளம்பரப் படம் : தினமலர்

August 13, 2010

ரத்த தான முகாம்


இந்தியா முழுவதும் 63000 யூனிட் ரத்தம் சேகரிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக  Go India Foundation, கோவை ESI மருத்துவமனையுடன் இணைந்து , ஆகஸ்டு 15ஆம் தேதி ரத்த தான முகாமை நடத்துகிறது.. விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.. கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரத்த தான முகாம் நடைபெறுகிறது.. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..
http://www.goindiafoundation.com/laal/tn.html என்ற வலைப்பக்கத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய்வர்கள் தொலைபேசி எண்கள் உள்ளன. கோவையில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.. sanjaigandhi@msn.com அல்லது காலை 9 மணிக்கு ESI மருத்துவமனைக்கு நேரில் வரவும்..

August 3, 2010

ஆடிப் பெருக்கு விழா வாழ்த்துகள்

ஊர்ல இருக்கும் போது ஆடி பதினெட்டெல்லாம் நமக்கு ரொம்ப ஸ்பெஷல். அன்னைக்கு குளிச்சே ஆகனும் என்பது தான் கொஞ்சம் கஷ்டம். 10, 11 மணிக்கெல்லாம் ஊரை காலிப்பண்ணிடுவோம்.. 3 ஊர்களுக்கு செல்வது வாடிக்கை.. தீர்த்தமலை, அனுமந்தீர்த்தம் மற்றும் ஒகேனக்கல். எனக்குப் பிடிச்சது ஒகேனக்கல் தான். மதிய சாப்பாடு அங்க சாப்டற மாதிரி கிளம்பிடுவோம். ஒகேனக்கல் போய் சேர்ந்ததும் பெண்கள் எல்லாம் அவங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. கையோடு எடுத்து செல்லும் பண்ட பாத்திரங்கள் கொண்டு சமையல் வேலை ஆரம்பிச்சிடுவாங்க..

 ஆண்கள் எல்லாம் எண்ணெய் தேச்சிக்க கிளம்பிடுவோம். ஒகெனக்கல்லில் ஆயில் மசாஜ் ரொம்ப பிரபலம். மனசாட்சியே இல்லாம ஒடம்பு முழுக்க எண்ணெய் விட்டு அடி பின்னி எடுப்பாங்க..அதே வலியோட அப்டியே அருவியில நின்னா.. அட அட.. ஒடம்புல இருந்த ஒட்டு மொத்த வலியும் அப்டியே ஓடிப் போய்டும்.. தண்ணில ஆட்டம் போட்டுட்டு வந்தா பயங்கரமா பசிக்கும்.. சமையலும் தயாரா இருக்கும். செம கட்டு தான்..

அப்டியே சாயங்காலம் வீட்டுக்கு வந்துதும் ஒரு கும்பல் சேர்ந்துடும்.. ஆளுக்கொரு தேங்காய் எடுத்துட்டு அதோட தோல் நீக்கிட்டு சின்னதா ஒரு ஓட்டைப் போட்டு தேங்காய் தண்ணியை வெளியேறிட்டு அதுல , ஊறவச்ச அரிசி, கொள்ளுப்பருப்பு , கொஞ்சம் வெல்லம் எல்லாம் ஃபுல்லா நிரப்பிடுவோம். அந்த தேங்காய்ல ஒரு நீளமான கொம்பு சொருகி வட்டமா உட்கார்ந்து நெருப்புல தேங்காயைச் சுடுவோம்.. நல்லா சூடேறினதும் வெடிக்க ஆரம்பிக்கும். அதை கொஞ்சம் ஆறவச்சி சாப்ட்டா.. ஆஹா..

ஹ்ம்ம்.. இப்போ அதெல்லாம் ஒரு பதிவெழுதி முடிச்சிக்க வேண்டியதா இருக்கு.. எல்லாருக்கு ஆடிபெருக்கு விழா வாழ்த்துகள்..
TEMPLATE ERROR: Unknown runtime binding: includable in widget